தமிழகம் முழுவதும் நாளை முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம் உணவகங்கள் தயாராகின்றன

Spread the love

தமிழகம் முழுவதும் நாளை (8-ந் தேதி) முதல் ஓட்டல்களில் அமர்ந்து உணவு அருந்தலாம். எனவே அதற்கேற்ப உணவகங்கள் தயாராகின்றன.

சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, புதிய தளர்வுகளுடன் இம்மாதம் 30-ந் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி 8- ந் தேதி (நாளை) முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. உணவகங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன் உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்க வேண்டும்.

உணவகங்களில் குளிர்சாதன வசதி இருந்தாலும் அதை இயக்கக் கூடாது உள்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நாளை முதல் டீ கடைகளிலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஓட்டல் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், மேலாளர்கள், தொழிலாளர்களுக்கான ஒழுங்கு விதிகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* உடல் வெப்ப பரிசோதனை செய்து வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்ப வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் இருப்பவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது.

* ஏ.சி. எந்திரங்களை பயன்படுத்தாமல் காற்றோட்டத்துக்கான அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.

* அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் வசதி செய்து தர வேண்டும். கழிவறைகளை நாளொன்றுக்கு 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். தரை, அலமாறிகள், சமையல் அறை, லிப்ட் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* அடிக்கடை கை படக்கூடிய மேஜைகள், பணம் செலுத்துமிடம், லிப்ட் பட்டன் போன்றவை சானிடைசர் மூலம் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும்.

* சமூக இடைவெளிக்காக மேஜைகளில் சேவை இல்லை என்ற பலகை வைக்கப்பட வேண்டும். இடவசதி பற்றிய தகவல் பலகையை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும்.

* உணவை கையாள்வோர், கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. காய்கறி, அரிசி, பருப்பு போன்றவற்றை கழுவி உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பை தொடர்ந்து நாளை முதல் ஓட்டல்கள் திறப்பதற்கு தயார் படுத்தப்படுகின்றன. இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் அதிபர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவர் வசந்தபவன் ரவி கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், டீ கடைகளை திறக்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆனால் தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் ஏ.சி. வசதி அவசியமாகிறது. கொரோனா பரவாமல் இருப்பதற்காக ஏ.சி. மீது அதற்கான பில்டரை போட்டு இயக்கலாம். அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும்.

ஓட்டல்களை காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இயங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page