மோதல் போக்குக்கு தீர்வு காண முயற்சி: இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

Spread the love

எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று லடாக் பகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவம் கடந்த மாதம் 9-ந் தேதி வடக்கு சிக்கிம் பகுதியிலும் நடந்தது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி உள்ளது.

இதனால் எல்லையில் பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே 12 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலும் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதைத்தொடர்ந்து, எல்லையில் நிலவும் மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கிழக்கு லடாக்கில், உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு (எல்.ஏ.சி.) பகுதியில் சீன எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற இடத்தில் நேற்று இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசினார்கள்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்திய குழுவுக்கு லே பகுதியில் உள்ள 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை தாங்கினார். சீன தரப்பில் திபெத் ராணுவ மாவட்ட தளபதி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். மோதல் போக்குக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் சீனா படைகளை குவிப்பதற்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தங்கள் பகுதியில் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதை சீனா ஆட்சேபிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டதாக தெரிகிறது. அத்துடன் கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ, கோக்ரா பகுதிகளின் நிலை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நமது குழுவினர் வலியுறுத்தி கூறியதாகவும் அறியப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில், இந்திய-சீன எல்லையில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ராணுவ மட்டத்திலும், தூதரக ரீதியாகவும் தீர்வு காண இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

சீன ராணுவ அதிகாரிகளுடன் பேசப்பட்ட விஷயங்கள் மற்றும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றிய விவரங்களை, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ராணுவ உயர் அதிகாரிகள் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானேயிடம் தெரிவிப்பார்கள்.

அதன்பிறகு ராணுவ நடவடிக்கைகள் இயக்குனரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page