கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை பிரேசில் நீக்கி உள்ளதால், உண்மைகளை மறைக்க முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோன வைரஸ் தொற்று, உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் வெறியாட்டம் போடும் நாடு பிரேசில் ஆகும். பிரேசில் மக்கள் தொகை பெருக்கத்தில் உலகின் 7-வது பெரிய நாடு. அங்கு 21 கோடிப்பேர் வாழ்கிறார்கள்.
அந்த நாட்டில் 6 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா தரவு மையம் சொல்கிறது. அது மட்டுமல்ல, அங்கு சுமார் 36 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் அந்த மையத்தின் புள்ளி விவரம் காட்டுகிறது.
ஆனால் அங்கு தொற்று இன்னும் அதிகமாக இருக்கும், கொரோனா பரிசோதனைகள் சரிவர நடத்தப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பரவல் விவகாரத்தை அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ சரியாக கையாளவில்லை; சரியாக கணிக்கத்தவறி விட்டார் என்றெல்லாம் குற்றம் சுமத்தப்படுகிறது.
அவர் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த பொது முடக்க விதிமுறைகளை நிராகரித்து விட்டார். இதற்காக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
அவர் சமூக இடைவெளியை பின்பற்றாமல், போராட்டங்களில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார் என்றும் குற்றம் சுமத்தப்படுகிறது.
இது சாதாரண காய்ச்சல் மாதிரிதான் என அவர் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்தார். அவருடன் ஒத்து போக முடியாத காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக 2 சுகாதார மந்திரிகள் பதவி விலகி இருப்பது நினைவு கூரத்தக்கது.
பாவம், அந்த நாட்டின் மக்கள் என்று சொல்கிற நிலை உள்ளது. அவர்கள் பதற்றத்தின் பிடியில்தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பின் தொகுப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு வந்த பிரேசில் அரசின் இணைய தளம் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிரடியாக நீக்கப்பட்டது. பிரேசில் அரசு இணையதளத்தில் கடைசியான வெளியான புள்ளி விவரங்கள் அங்கு 6 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாகவும், 34 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் காட்டியது.
நீக்கப்பட்ட இணையதளம் மீண்டும் சனிக் கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் மொத்த தொற்று பாதிப்பு, உயிரிழப்பு, மாகாணங்களின் பாதிப்பு நிலவரம் எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் மட்டுமே இப்போது வெளியிடப்படுகின்றன.
இது குறித்து டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில் அந்த நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, “கொரோனா தொற்றின் ஒட்டுமொத்த நிலவரம், நாட்டின் தற்போதைய நிலையை பிரதிபலிப்பதில்லை” என்று கூறி சப்பை கட்டு கட்டி இருக்கிறார்.
ஆனால் இந்த முடிவை ஊடகங்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் பலியானதை தொடர்ந்தே உண்மை புள்ளி விவரங்கள் மறைக்கப்படுகின்றன என்று விமர்சிக்கப்படுகிறது.