தமிழகத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு 20 வயது கர்ப்பிணி உள்பட 18 பேர் கொரோனாவுக்கு பலி புதிதாக 1,515 பேரை தொற்றியது

Spread the love

தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக நேற்று 20 வயது கர்ப்பிணி உள்பட 18 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,515 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஒரே நாளில் 1,515 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 11 பேரும் அடங்குவர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்து 667 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 945 பேர் ஆண்கள் மற்றும் 570 பேர் பெண்கள் ஆவர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 15 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா ஒருவரும், வேலூரை சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண்ணும் அடங்குவர். உயிரிழந்த 20 வயது பெண் ரத்த அழுத்த நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரையில் 269 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 212 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 604 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 999 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 61 குழந்தைகளும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 1,246 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 208 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் 1,156 பேரும், செங்கல்பட்டில் 135 பேரும், திருவள்ளூரில் 55 பேரும், காஞ்சீபுரத்தில் 16 பேரும், தூத்துக்குடி, மதுரையில் தலா 14 பேரும், திண்டுக்கல், விழுப்புரத்தில் தலா 11 பேரும், ராணிப்பேட்டையில் தலா 10 பேரும், வேலூர், ராமநாதபுரத்தில் தலா 9 பேரும், கள்ளக்குறிச்சியில் தலா 8 பேரும், தஞ்சாவூரில் 7 பேரும், கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் தலா 6 பேரும், விருதுநகரில் 5 பேரும், திருச்சியில் 4 பேரும், தேனி, தென்காசி, சேலம், கோவையில் தலா 3 பேரும், தர்மபுரி, புதுக்கோட்டை, நெல்லையில் தலா 2

பேரும், திருவாரூர், அரியலூரில் தலா ஒருவருக்கும் என தமிழ்நாட்டில் நேற்று 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 133 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து விமானம் மூலம் வந்த 47 பேரும், ரெயில் மூலம் வந்த 260 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,385 பேரும், கடல் மார்க்கமாக வந்த ஒருவரும் என மொத்தம் 1,826 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16 ஆயிரத்து 275 மாதிரிகள் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 5 லட்சத்து 92 ஆயிரத்து 970 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page