கேரளாவில் வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள்,மால்கள் திறப்பு: கோவில்களில் பக்தர்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து தரிசனம்

Spread the love

கேரளாவில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலத்தில் இரண்டரை மாதங்களுக்குப் பின் இன்று வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள் திறக்கப்பட்டன. திருவனந்தபுரம், கொச்சின் போன்ற நகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. உணவகங்களில் 50 சதவீதம் பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம் என அனுமதிக்கப்பட்டும் பெரும்பாலான உணவகங்களில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டன.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூரில் கோவிலில் இன்று 300 பக்தர்கள் மட்டுமே (ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே) அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கோவிலுக்குள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், கோவிலுக்குள் வந்தவுடன் கைகளைச் சுத்தம் செய்து, சமூக விலகலைக் கடைப்பிடித்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலுக்குள் வரும் பக்தர்களின் வயது, உள்ளிட்ட விவரங்கள் குறிக்கப்பட்டபின், தெர்மல் ஸ்கேனிங் முடிந்தபின்பு தான் அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை திறக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை முடித்து சான்றிதழைத் தாக்கல் செய்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவில் மாதப்பிறப்புக்காக நடை திறக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் 10 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொச்சியில் தேவாலயம் இன்று திறக்கப்பட்டதும் 80-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழிபட்டனர்.

அதேபோல பெரும்பாலான மசூதிகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில மசூதிகள் மட்டும் திறக்கப்பட்டு சமூக விலகலுடன் தொழுகை நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page