பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது: மத்திய மந்திரி ஹர்சவர்தன்

Spread the love

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளது; ஆனால் மன நிறைவுக்கு இடம் இல்லை என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறினார்.

புதுடெல்லி,

நமது நாட்டில் கொரேனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 75 நாள் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவை கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் திறக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதற்கு மத்தியில் கொரோனா தொற்றும் பரவி வருகிறது.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா 19.61 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பிரேசில் 7.07 லட்சத்துக்கும் கூடுதலான கொரோனா தொற்று நோயாளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ரஷியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு 4.84 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நான்காம் இடத்தில் இங்கிலாந்து இருக்கிறது. இங்கு 2.88 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 2.67 லட்சத்தை எட்டும் நிலையில் உலக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள நாடுகளில் 5-வது இடம் வகிக்கிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.

கொரோனா தொற்று பாதித்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பியோர் எண்ணிக்கையும், தற்போது சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளது.

சரியாக சொல்வதென்றால், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 214 ஆக உள்ளது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 917 ஆக இருக்கிறது.

குணம் அடைந்தோர் சதவீதம், 48.47 சதவீதம் ஆக இருக்கிறது.

ஒரே நாளில் பலியானவர்களின் எண்ணிக்கை 266 ஆகும். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 7,466 என்ற அளவை அடைந்துள்ளது.

இதில் மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. அங்கு 3,169 பேர் பலியாகி உள்ளனர்.

முதல் 10 இடங்களில் முதல் இடத்தை மராட்டியம் பிடித்துள்ள நிலையில், எஞ்சிய 9 நிலைகளில் அடுத்துள்ள மாநிலங்கள் குஜராத் (1,280), டெல்லி (874), மத்திய பிரதேசம் (414), மேற்கு வங்காளம் (405), தமிழகம் (286), உத்தரபிரதேசம் (283), ராஜஸ்தான் (246), தெலுங்கானா (137), ஆந்திரா (75) உள்ளன.

இதற்கு மத்தியில் கொரோனா தொடர்பான மத்திய மந்திரிகள் குழுவின் 16-வது கூட்டம், டெல்லியில் சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் எஸ். ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, நித்யானந்த ராய், மன்சுக்லால் மாண்டவியா, அஷ்விணி குமார் சவுபே மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் உத்திகளை காணொலி காட்சி வழியாக மத்திய மந்திரிகள் குழு ஆய்வு செய்தது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் சமீபத்திய நிலை மத்திய மந்திரிகள் குழுவுக்கு எடுத்துக்கூறப்பட்டது. கொரோனா பரவலுக்கு எதிரான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு, காணப்படும் முன்னேற்றம் குறித்து விளக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறியதாவது:-

பொதுமக்கள் இன்னும் அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்; தனி மனித இடைவெளியை பின்பற்றி வர வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; அடிக்கடி கைகளை சுத்தம் செய்து சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை நாடு முழுவதும் 12.55 கோடிப்பேர் பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது சுய ஆபத்து மதிப்பீட்டில் இது உதவியாக அமையும்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் அதில் மன நிறைவு அடைவதற்கு இடம் இல்லை.

எல்லா அரசு அலுவலகங்களும் திறக்கப்பட்டு விட்டன. கொரோனா வைரசுக்கு எதிரான சமூக தடுப்பூசியாக, நாம் தனி மனித இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணியவும், கைச்சுத்தம் பராமரிக்கவும் தவறக்கூடாது என்று அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிராக போராடும் வகையில் உள் கட்டமைப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டிருப்பது குறித்தும் மத்திய மந்திரிகள் கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

* கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அர்ப்ணிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை 958 ஆகும். அவற்றில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை, 1 லட்சத்து 67 ஆயிரத்து 883 ஆகும்.

* தீவிர சிகிச்சை பிரிவுகளில் 21 ஆயிரத்து 614 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 73 ஆயிரத்து 469 படுக்கைகளும் உள்ளன.

* அர்ப்பணிக்கப்பட்ட 2,313 கொரோனா சுகாதார மையங்கள் இருக்கின்றன. அவற்றில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 37 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில் 10 ஆயிரத்து 748 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 46 ஆயிரத்து 635 படுக்கைகளும் இப்போது கிடைக்கின்றன.

* மேலும், 7,525 கொரோனா பராமரிப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 642 படுக்கைகள் போடப்பட்டுள்ளன.

* வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 494 ஆக இருக்கின்றன. மேலும் 60 ஆயிரத்து 848 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ள கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 49 லட்சத்தை கடந்து இருக்கிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 682 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page