நியூயார்க்கில் நடைபெறும் 75- வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

நியூயார்க்,
சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 6 மாத காலத்தில் இந்த தொற்று உலகமெங்கும் கால் பதித்துள்ளது. அந்த வகையில் உலகமெங்கும் இந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை நேற்று 70 லட்சத்தை தாண்டி விட்டது.
உலக முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 72, 00,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் 75 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்கு உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ நா பொதுச்சபையின் தலைவர் திஜ்ஜானி முகமது பாண்டே கூறியதாவது:-
கொரோனா தாக்கத்தால் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் 75- வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையிலும் குறிப்பிட்ட தேதியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டம் நடைபெறும் என கூறினார்.