பாக்.,கிற்கு ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை; இரு ராணுவத்தினர் கைது

Spread the love

ஜெய்ப்பூர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், இந்திய ராணுவ வெடிமருந்து கிடங்கில் பணியாற்றும் இருவரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து, அம்மாநில போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல், உமேஷ் மிஸ்ரா கூறியதாவது: ராஜஸ்தானில், கங்கா நகர் மாவட்டத்தில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் பணியாற்றிய, விகாஸ் குமார், சிமல் லால் ஆகியோர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஒரு இளம் பெண் மூலம், இருவரையும் உளவு வேலைக்கு பயன்படுத்தியுள்ளது. அந்த பெண், ‘அனோஷ்கா சோப்ரா’ என்ற, ‘பேஸ்புக்’ கணக்கு வாயிலாக, விகாஸ் குமாருக்கு, நட்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் மூலம் இருவரும் நெருக்கமாகியுள்ளனர்.

பின், அந்தப் பெண், மும்பை ராணுவ கேன்டீனில் பணியாற்றுவதாக கூறி, இந்திய, ‘வாட்ஸ் ஆப்’ எண் மூலம், தன் தொடர்பை வலுப்படுத்தியுள்ளார். அத்துடன் பல வாட்ஸ் ஆப் குழுக்களில், விகாஸ் குமாரை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண், அமித் குமார் என்பவரை, தன் உயரதிகாரி எனக் கூறி, விகாசுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அவருடன், விகாசுக்கு தொடர்பு ஏற்பட்ட உடன், அந்த பெண் தன் பேஸ்புக் கணக்கை மூடி விட்டார். இதையடுத்து, அமித் குமார், பணத்தாசை காட்டி, விகாசிடம் இருந்து, ராணுவ வெடிமருந்து கிடங்கின் படங்கள், தயாரிக்கப்படும் வெடிமருந்துகள், ஆயுத போக்குவரத்து, கிடங்கில் தண்ணீர் கொள்முதல், வினியோகம் உள்ளிட்ட விபரங்களை சேகரித்துள்ளார்.

இதற்காக, கடந்த ஓராண்டில், விகாஸ் குமாரின் இரு வங்கிக் கணக்குகளில், 75 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, ராணுவ உளவுப் பிரிவிற்கு தெரிய வந்ததை அடுத்து, ‘பாலைவன வேட்டை’ என்ற பெயரில், விகாஸ் குமாரை பிடிக்க வலை விரிக்கப்பட்டது. அதன்படி, அவர் உளவு பார்த்ததற்கான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டன. இதையடுத்து, விகாஸ் குமார், அவருக்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய சிமன் லால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில், விசாகப்பட்டினத்தில், கடற்படை அதிகாரிகள், 11 பேர் உளவு பார்த்ததாக கைதான நிலையில், தற்போது, ராணுவ வெடிமருந்து ரகசியங்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page