‘டப்பாவாலா’க்களின் வாழ்வை முடக்கிப்போட்ட கொரோனா!

Spread the love

காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள்தான் இந்த டப்பாவாலாக்கள்.

டப்பாவாலாக்கள், மும்பையில் ரொம்பவும் பிரபலம். அலுவலகங்களிலும், கம்பெனிகளிலும் வேலை பார்க்கிறவர்களுக்கு, அவர்களின் வீடுகளில் இருந்து சமைக்கப்பட்ட உணவுகளை டப்பாக்களில் (கேரியர்) பெற்று, அதை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கிவிட்டு, காலி டப்பாக்களை மீண்டும் அவர்களது வீடுகளில் கொண்டு போய் சேர்க்கும் மகத்தான பணியை நேர்த்தியாக செய்து முடிப்பவர்கள்தான் இந்த டப்பாவாலாக்கள்.

மும்பையில் வேலை பார்க்கிறவர்களின் வாழ்வோடு இரண்டற கலந்து விட்டவர்கள் இவர்கள். சைக்கிள், இரு சக்கர வாகனம், நடை, ரெயில் என பல்வேறு வழிகளில் இவர்கள் இந்த வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.

வெயில், மழை என எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். மும்பையில் 5 ஆயிரம் டப்பா வாலாக்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு உணவு டப்பாக்களை வழங்கி மகத்தான ஒரு சேவையை செய்து வந்தார்கள்.

இவர்களது சேவை 125 ஆண்டுகளாக மும்பையில் கிடைத்துக்கொண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் முன்பு இந்தியா வந்திருந்தபோது, இவர்களைப் பற்றி கேள்விப்பட்டு சந்தித்து பேசி மகிழ்ந்தது, பாராட்டியது டப்பா வாலாக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அன்றி வேறல்ல. இவர்களைப் பற்றி பி.பி.சி. ஆவணப்படம் தயாரித்து வெளியிட்ட வரலாறும் உண்டு.

டப்பா வாலாக்கள் மாதத்துக்கு தலா ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிப்பது உண்டு. ஆனால் இந்த பாழாய்ப்போன கொரோனா வைரசும், அதன் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் டப்பாவாலாக்களின் பிழைப்பை கெடுத்து விட்டது.

கெடுத்தது மட்டுமல்ல, இனி அவர்களுக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்வியையும் எழுப்ப வைத்து விட்டது.

பொது முடக்கம் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி தொடங்கியபோதே, டப்பா வாலாக்கள் ஜூன்னார், அம்பேகான், ராஜ்குருநகர், மாவல், ஹவேலி, முல்ஷி உள்ளிட்ட தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர். பெரும்பாலான டப்பாவாலாக்கள் புனேயின் மாவல் பகுதியை சேர்ந்தவர்கள்தான். திடீரென கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால், மார்ச் மாதம் வசூலிக்க வேண்டிய சம்பளத்தை கூட பலரால் வசூலிக்க முடியாமல் போய்விட்டது, சோகம்தான்.

மும்பை டப்பாவாலாக்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் டாலேகர் சொல்வதென்ன?

“டப்பாவாலாக்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே தங்கள் சேவைகளை நிறுத்தி விட்டனர். அரசாங்கம் இப்போது அலுவலகங்கள், நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து விட்டது. ஆனால் எங்கள் டப்பாவாலாக்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எப்போது அவர்கள் தங்கள் சேவையை தொடர்வார்கள் என்பதில் ஒரு நிச்சயமற்ற நிலைதான் இருக்கிறது.

எங்கள் சேவை, புறநகர் ரெயில்களைத்தான் முற்றிலும் சார்ந்து இருக்கிறது. இந்த ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்குகிறவரை எங்கள் சேவையை நாங்கள் தொடங்க முடியாது. ரெயில்கள் ஓடத்தொடங்குவது ஜூலையிலா? ஆகஸ்டிலா? யாருக்குத் தெரியும்?

அது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை மீண்டும் எப்போது பயன்படுத்த தொடங்குவார்கள் என்பதுவும் நிச்சயமற்றதாகத்தான் இருக்கிறது.

மும்பையில் பெரும்பாலான கட்டிடங்களில் வீட்டு வசதி சங்கங்கள், உறவினர்கள் வருகையை கூட தடை செய்து விட்டன. அவர்கள் எப்போது நாங்கள் டப்பாகளை சேகரிக்கவும், திரும்ப ஒப்படைக்கவும் அனுமதிப்பார்கள்?

நாங்கள் முக கவசங்கள் அணிந்து கொள்ளவும், சானிடைசர் பயன்படுத்தவும், இன்னும் என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உண்டோ அவற்றையெல்லாம் பின்பற்றவும் தயாராக இருக்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்களை பயன்படுத்திக்கொள்வார்களா?”இப்படி வேதனையுடன் கேட்கிறார் சுபாஷ் டாலேகர்.

ரகுநாத் மெட்கே என்ற டப்பாவாலா பேசும்போது, “கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில் ஊரடங்கு வந்து விட்டது. மார்ச் மாதம் எங்களில் பலரும் சம்பளம் வாங்க வில்லை. எங்கள் கையில் இருந்து சேமிப்புகளும் கரைந்து விட்டன. ரெயில்கள் ஓடத்தொடங்கினால்தான் திரும்ப வர முடியும். இப்போது விவசாய வேலைகளை கவனித்து வருகிறேன்” என்கிறார். இவர் ராஜ்குருநகர் பகுதியை சேர்ந்தவர்.

இப்படி டப்பாவாலாக்கள் தங்கள் சுய பாதிப்புகளை சொல்கிறார்கள்.

“கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் எல்லோரும் சிவசேனா கட்சிக்கு ஆதரவாக இருந்தோம். எங்களுக்கு இந்த கடினமான தருணங்களில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உதவ வேண்டும்” என்ற வேண்டுகோளையும் இவர்கள் முன் வைக்க தவறவில்லை.

மும்பை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்றால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். புறநகர் ரெயில்கள் ஓட வேண்டும். இந்த நாளைத்தான் டப்பாவாலாக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த நாள் என்று வரும்? கொரோனாவுக்கே வெளிச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page