ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் மிரட்டக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the love

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத சிறு, குறு நிறுவனங்களை மிரட்டக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ஊரடங்கு காலத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மார்ச் 29-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி லூதியானா ஹேண்ட் டூல்ஸ் அசோசியேஷன், கோயமுத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த 5-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறுதொழில் நடத்தும் நிறுவனங்களை மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கக்கூடாது என்றும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந் தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு 12-ந் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியது. அத்துடன் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை 12-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம். ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று காணொலி காட்சி மூலம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு ஊதியமும் வழங்காத சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் மிரட்டல் விடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. தொழிற்சாலைகளும், ஊழியர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியம் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். மத்திய அரசும், மாநில அரசுகளும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தி, சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல ஆணையர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மார்ச் 29-ந் தேதி பிறப்பித்த அறிவிப்பாணையின் சட்டரீதியான முகாந்திரம் குறித்து மத்திய அரசு 4 வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

பின்னர் இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page