கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.

வாஷிங்டன்,
கொரோனா வைரஸ் தாக்கம், இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அந்த வைரஸ் இதுவரை இல்லாத வகையில் தற்போது வேகம் காட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுப்பதற்கு இன்று வரை சந்தைக்கு தடுப்பூசி வரவில்லை. தடுப்பூசி சோதனை முயற்சிகள் வெற்றி கண்டு, தயாரிக்கிற நிலை உருவாக வேண்டும். அதுவும் 700 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தேவையான ‘டோஸ்’ தயாரிப்பது என்பது எளிதான வேலை இல்லை.
எனவே அடுத்த ஆண்டுதான் அனைவருக்கும் தடுப்பூசி என்பது சாத்தியம் ஆகும் என்று நம்பப்படுகிறது.
அடுத்து ஆண்டு வரை காத்திருந்து அத்தனை பேருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்ற பொறுமையை கடைப்பிடிக்கிற நிலையில் அமெரிக்கா இல்லை. அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நியுயார்க், நியுஜெர்சி போன்ற மாகாணங்களில் கொரோனா பரவல் குறைந்தாலும் அரிசோனா, வட கரோலினா, தென் கரோலினா, புளோரிடா, டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் இப்போது காட்டுத்தீ போல கொரோனா பரவுகிறது.
நேற்று மதிய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழப்புகளும் 1 லட்சத்து 14 ஆயிரத்தை நெருங்கி விட்டது. எனவே கொரோனாவை தடுத்தாக வேண்டிய அவசரத்தில் அமெரிக்கா இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தடுப்புக்கு காசநோய் தடுப்பூசி அல்லது போலியோ தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்கள்; காசநோய் தடுப்பூசியை கொரோனா தடுப்புக்கு கொடுத்து சோதிக்கும் பரிசோதனைகள் தொடங்கி இருக்கின்றன என்ற தகவலை ’தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி டெக்சாஸ் சுகாதார அறிவியல் மையத்தின் நுண்ணுயிர் நோய்க்கிருமி உருவாக்கம், நோய் எதிர்ப்புத்துறை பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோ கூறும்போது, “இப்போதைக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட உலகின் ஒரே தடுப்பூசி இதுதான்” என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜெப்ரி டி சிரில்லோதான், கொரோனாவுக்கு காசநோய் தடுப்பூசி பரிசோதனையை வழிநடத்துகிறார். பேசிலஸ் கால்மெட் குய்ரின் என்னும் இந்த தடுப்பூசியைத்தான் நாம் பி.சி.ஜி. என்று அழைப்பது உண்டு.
இந்த தடுப்பூசிக்கு ஏற்கனவே அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது பாதுகாப்பானது என்பதற்கு நீண்ட கால வரலாறு இருக்கிறது.
இன்னொரு விஞ்ஞானிகள் குழு, கொரோனா வைரசுக்கு போலியோ தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று கூறி அதை பரிசோதித்து பார்க்க முன் வந்துள்ளது.
இதுபற்றி அந்த குழு கூறுகையில், “ காசநோய் மற்றும் போலியோவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஏற்கனவே கோடிக்கணக்கானவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் உடலின் முதல் வரிசை பாதுகாப்பை புதுப்பிக்க குறைந்த ஆபத்தான வழியை வழங்க முடியும். உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு அமைப்பானது கொரோனா வைரஸ் உள்பட பலவிதமான நோய் கிருமிகளுக்கு எதிரானது” என குறிப்பிட்டது.
கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருந்து துறை பேராசிரியரான பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அஸ்ரா ராசா, “பி.சி.ஜி. தடுப்பூசியால், பிற நோய்க்கிருமிகளை எதிர்த்துப்போராடும் திறனை மேம்படுத்த முடியும். சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு கூட இதை கொடுக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.