சென்னையில் மட்டும் 28,924 பேருக்கு தொற்றுதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது

Spread the love

தமிழகத்தில் 1,933 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் மட்டும் 28 ஆயிரத்து 924 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


சென்னை,

தமிழகத்தில் கொரோனாவின் மாயவலையில் சிக்குவோர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1,933 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதில் தலைநகர் சென்னையில் மட்டும் 28 ஆயிரத்து 924 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் 1,186 ஆண்கள், 796 பெண்கள் என 1,933 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 12 வயதுக்கு உட்பட்ட 96 குழந்தைகளும், 60 வயதுக்கு உட்பட்ட 264 முதியவர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 39 பேரும் உள்ளனர்.

18 பேர் பலி

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 10 பேர், தனியார் மருத்துவமனையில் 8 பேர் என 18 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 38 வயது ஆண் உட்பட 16 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். இதுவரையில் கொரோனாவுக்கு 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,342 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரையில் 22 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து உள்ளனர். இதையடுத்து நேற்றைய நிலவரப்படி 18 ஆயிரத்து 281 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

40,698 பேர் பாதிப்பு

நேற்று சென்னையில் 1,479 பேரும், செங்கல்பட்டில் 128 பேரும், திருவள்ளூரில் 92 பேரும், மதுரையில் 31 பேரும், காஞ்சீபுரத்தில் 26 பேரும், திருவண்ணாமலையில் 22 பேரும், தூத்துக்குடியில் 18 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 பேரும், விழுப்புரத்தில் 16 பேரும், நெல்லையில் 15 பேரும், சிவகங்கையில் 12 பேரும், கடலூர், நாகப்பட்டினத்தில் தலா 8 பேரும், விருதுநகர், திருச்சி, தஞ்சாவூரில் தலா 7 பேரும், கோவை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூரில் தலா 6 பேரும், வேலூர், ராமநாதபுரத்தில் தலா 5 பேரும், அரியலூர், ராணிப்பேட்டை, தென்காசியில் தலா 4 பேரும், தேனி, தர்மபுரியில் தலா 3 பேரும், திண்டுக்கல், நாமக்கலில் தலா 2 பேரும், பெரம்பலூர், கரூரில் தலா ஒருவரும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது.

மாவட்ட வாரியாக உயிரிழப்பு

கொரோனாவுக்கு பலியானவர்கள் பட்டியலில் சென்னையில் 294 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், திருவள்ளூரில் 17 பேரும், காஞ்சீபுரத்தில் 6 பேரும், விழுப்புரம், வேலூர், மதுரையில் தலா 3 பேரும், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மற்றும் விமான கண்காணிப்பு முகாமில் ஒருவரும் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 175 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 73 பேரும், ரெயில் மூலம் வந்த 309 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,476 பேரும், கடல் மார்க்கமாக வந்த 5 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page