ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்ற செய்தி தவறானது என்றும், அதேவேளை நோயின் வீரியத்தை மக்கள் உணராதது வேதனை அளிக்கிறது என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் திறக்கப்பட்ட தண்ணீரில் மலர்களை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, வி.சரோஜா, கே.சி.கருப்பணன், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், கலெக்டர் சி.அ.ராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்பு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
எட்டு வழி சாலை திட்டம்
கேள்வி: எட்டு வழிச் சாலை திட்டம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மத்திய அரசு கேட்கிறது. இதில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம்முடைய தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி தான் சாலையை அமைக்கிறோம். தேவையான சாலைகளை மத்திய அரசு அமைத்துக் கொடுப்பதற்கு தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டமல்ல. அதற்கு நாம் உதவி தான் செய்கிறோம். ஏனென்றால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, நாமக்கல், கரூர், மதுரை போன்ற இடங்களுக்கு இந்த சாலை வழியாக செல்லலாம். எட்டு வழிச்சாலை சேலத்திற்கு மட்டும் வருவது கிடையாது. சேலம் வழியாக பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியும். மேலும் எரிபொருளை மிச்சம், பயண நேரம் குறைப்பு, மாசு குறைப்பு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
என் பெயரில் தவறான தகவல்
கேள்வி: மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் வருகிறதே?
பதில்: இது ஒரு தவறான தகவல். இன்றைக்கு நான் வாட்ஸ்-அப்பில் பார்த்தேன். என் பெயரில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று ஒரு தவறான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை. அந்தத் தவறான தகவலை வெளியிட்டவர் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படும் என்கிற தகவல் தவறானது.
சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு ஒரே மருந்து. ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கிற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் மக்கள் கடைபிடிப்பதை புறக்கணிக்கிறார்கள். அதுதான் வேதனையாக இருக்கின்றது. இந்த நோயின் வீரியத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை, நமக்கு வராது என்றுதான் ஒவ்வொருவரும் நினைக்கிறோம். அரசின் அறிவுரைகளை கடைபிடிப்பதில்லை. எனவே தமிழக மக்கள் குறிப்பாக சென்னை மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசு அறிவிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். அப்போதுதான் கொரோனாவை தடுக்க முடியும்.
கல்வி கட்டணம் அதிகமாக வசூலித்தால்…
கேள்வி: கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வரப் பெறுகிறதே?
பதில்: அதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அந்தப் பள்ளியின் மீது அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் என்ன?
பதில்: இது மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம். அதைவிட குறைவாகத்தான் நாங்கள் நிர்ணயித்திருக்கிறோம்.
பள்ளிகள் திறப்பு குறித்து…
கேள்வி: தனியார் மருத்துவமனையை கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?
பதில்: எப்படி கையகப்படுத்துவீர்கள்? இது ஜனநாயக நாடு, சர்வாதிகார நாடு அல்ல. மருத்துவமனையை நடத்துவதற்கு தனியாருக்கு உரிமை இருக்கிறது. யாரும் அதை தடுக்க முடியாது. சிகிச்சை செய்ய சொல்லலாம், சிகிச்சை கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.
கேள்வி: பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவெடுத்துள்ளதா?
பதில்: மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அறிவித்திருக்கிறது. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும். தொற்று படிப்படியாக குறைக்கப்பட்ட பிறகு கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையெல்லாம் ஆராய்ந்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.