டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக 500 ரெயில் பெட்டிகள் – மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்

Spread the love

டெல்லியில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்து உள்ளது.

அங்கு நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 2,134 பேர் புதிதாக கொரோனவிடம் சிக்கி உள்ளனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 1,300-ஐ நெருங்கியுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கில் புதிய நோயாளிகள் வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் புதிய நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி கெஜ்ரிவால், துணைநிலை கவர்னர் அனில் பைஜால் ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, பேரிடர் மேலாண்மை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், டெல்லியில் வேகமெடுத்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப்பின் டெல்லியில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தனது டுவிட்டர் தளத்தில் அமித்ஷா வெளியிட்டார்.

அதில் அவர் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் டெல்லிக்கு உடனடியாக 500 ரெயில் பெட்டிகளை வழங்க மத்திய மோடி அரசு முடிவு செய்து உள்ளது. இந்த பெட்டிகளால் 8 ஆயிரம் படுக்கைகள் கிடைக்கும். மேலும் கொரோனாவுக்கு எதிரான அனைத்துவித மருத்துவ உபகரணங்களையும் இந்த பெட்டிகள் கொண்டிருக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

டெல்லியில் அடுத்த 2 நாட்களில் கொரோனா பரிசோதனை இருமடங்காக உயர்த்தப்படும் எனக்கூறியுள்ள அமித்ஷா, இது 6 நாட்களில் 3 மடங்காக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வீடுகள் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page