உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீன ராணுவத்தின் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து சீன அரசாங்கம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாத நிலையில், லடாக் தாக்குதலில் 5 சீன ராணுவ வீரர்கள் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் சீனாவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவம் இரண்டு முறை சீன எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் அதற்கு சீன ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக சீனாவிற்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்சினைக்கு காரணம். தனது எல்லைக்குள்ளேயே இந்தியா தனது செயல்பாட்டை மேற்கொண்டது.
லடாக் தாக்குதலின் மூலம் உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டது. லடாக் எல்லை பகுதியில் இரு நாடுகளும் அமைதியை பேணுவது மிகவும் அவசியம். இந்தியாவை போலவே சீனாவும் செயல்படும் என நம்புகிறோம்” என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.