தென் கொரியாவுடனான மோதல் காரணமாக எல்லையில் உள்ள இரு நாடுகளின் தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடி வைத்து தகர்த்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சியோல்,
இரண்டாம் உலகப்போரின் முடிவில் கொரியா, வடகொரியா, தென்கொரியா என இருநாடுகளாக பிரிந்தது. அதனை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பகைமை உருவானது.
இதனால் கொரிய தீபகற்பம் பதற்றமான சூழலுக்கு தள்ளப்பட்டது.
2011-ம் ஆண்டில் வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் பொறுப்பு ஏற்றது முதல் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்தது.
ஆனால் கடந்த 2018ம் ஆண்டு இந்த சூழல் மாறியது. தென்கொரியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் கலந்துகொண்டதன் மூலம் பரம எதிரிகளாக இருந்த இருநாடுகளுக்கு இடையே பரஸ்பர நட்பு உருவானது.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், தென்கொரியா அதிபர் மூன் ஜே இன்னும் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் சந்தித்து பேசினர். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் குறைந்தது.
எனினும் இந்த இணக்கமான சூழல் ஒரு ஆண்டுகூட நீடிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்கொரியாவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என கிம் ஜாங் அன் அறிவித்தார். இதனால் இருநாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் போக்கு உருவானது.
இந்த நிலையில் கடந்த மாதம் 4ந்தேதி ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாதென வரையறுக்கப்பட்ட கொரிய எல்லை பகுதியில் வடகொரியா ராணுவமும், தென் கொரியா ராணுவமும் மோதிக்கொண்டன.
இதனிடையே வடகொரியத் தலைவர் கிம் ஜாங்அன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர்.
மேலும் துண்டு பிரசுரங்களையும் வடகொரியா எல்லைக்குள் வீசி எறிந்தனர். இது வட கொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தென் கொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக இரு நாடுகளின் எல்லையில் உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழையத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வடகொரியா ராணுவத்துக்கு கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோஜோங் அண்மையில் உத்தரவிட்டார்.
இந்நிலையில் வடகொரியாதென் கொரியா எல்லையில் அமைந்துள்ள கேசாங் நகரில் இருக்கும் இரு நாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம் நேற்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
தொடர்பு அலுவலகத்தில் நாங்கள்தான் தகர்ப்போம் என வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளது.
தென் கொரியாவின் மோசடிகள் வடகொரியா மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியததாகவும் அதன் விளைவாக வ தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்ட தாகவும் வட கொரிய அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென் கொரியாவுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக வட கொரிய அரசு அறிவித்துள்ளது. காரணமாக கூறிய தீபகற்பத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே தொடர்பு அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.