இந்திய பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்பு முகாம் அமைத்ததால்தான் மோதல் ஏற்பட்டதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

புதுடெல்லி,
லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த 15-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் பலியானார்கள். சீன ராணுவ தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த மோதல் எப்படி தொடங்கியது என்பது குறித்து இந்த விவகாரத்தை அறிந்த சிலர் தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-
கல்வான் ஆற்றின் குறுக்கே இந்திய-சீன எல்லைக்கோடு செல்கிறது. அந்த ஆற்றின் தென்கரையில் எல்லைக்கோடு அருகே இந்திய பகுதியில் சீன ராணுவம் ஒரு கண்காணிப்பு முகாம் அமைத்தது.
அப்பகுதியில் சீன ராணுவம் கண்காணிப்பு மையம் அமைத்தது, ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகும். இதுவே மோதலுக்கு வழிவகுத்தது.
கடந்த 15-ந் தேதி மாலை, அப்பகுதிக்கு வந்த இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான இந்திய ராணுவ வீரர்கள், இந்திய பகுதியில் முகாம் அமைத்ததற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். முகாமை அகற்ற முயன்றனர்.
அப்போது முகாமில் இருந்த குறைந்த எண்ணிக்கையிலான சீன வீரர்கள், இந்திய படையினரின் ஆட்சேபனைக்கு கோபத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், உடனே சீன பகுதிக்கு சென்று விட்டனர்.
ஆனால், சற்று நேரத்தில் அதிகமான படை வீரர்களுடன் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்தனர். கற்களையும், ஆணி பொருத்தப்பட்ட தடிகளையும், இரும்பு கம்பிகளையும் கொண்டு வந்திருந்தனர்.
அதற்குள் இந்திய ராணுவ தரப்பிலும் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் முகாமை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் மலை உச்சியில் சண்டை நடந்தது. அப்போது, சாலையின் ஒரு பகுதி பிளந்து கொண்டது. அதனால், இந்திய, சீன ராணுவ வீரர்கள் சிலர், கல்வான் ஆற்றுக்குள் விழுந்தனர்.
சீன ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இந்த சண்டையில், இந்திய ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 வீரர்கள் பலியானார்கள். சீன ராணுவ தரப்பில் எத்தனைபேர் பலியானார்கள் என்று தெரியவில்லை. மொத்தம் 35 ராணுவ வீரர்கள் பலியாகியும், படுகாயமடைந்தும் உள்ளதாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
முதலில், இந்திய ராணுவ வீரர்கள் சிலரை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாகவும், பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.