சென்னையில் முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சென்னையில் கொரோனா தடுப்பு பணியை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டு உள்ள அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், கே.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர்கள் பேட்டி
கூட்டத்தின் முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘சென்னையை பொறுத்தவரை முழு ஊரடங்கு மிக கடுமையாக இருக்கும். மக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த ஊரடங்கை மக்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்,’ என்றார். அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை இணைந்து அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து கண்காணித்து வருகிறது. கொரோனா சங்கிலி தொடரை துண்டிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது சமூக பரவலாக மாறிவிடக் கூடாது.’ என்றார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, ‘ கொரோனா பாதிப்பின் ஏற்றம், இறக்கம் வைத்து நாம் எதுவும் கூறமுடியாது. நேற்று (நேற்று முன்தினம்) பாதிப்பு குறைவு என்பது மகிழ்ச்சி. அதேபோல் சோதனையும் குறைவாக நேற்று செய்யப்பட்டது. இன்று அதிகமாக எடுத்துள்ளோம். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்தால்தான் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூற முடியும்.’ என்று தெரிவித்தார்.