சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும், ஒப்பந்தத்துக்கு அடிபணிந்தே அவற்றைப் பயன்படுத்தவில்லை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி,
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15, 16-இல் இந்தியா – சீனா ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன ராணுவத்தின் தரப்பில் 43 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று விடியோ மூலம், “எவ்வித ஆயுதமின்றி இந்திய ராணுவ வீரர்களை அனுப்பியது யார்? அவர்கள் ஏன் ஆயுதம் இல்லாமல் அனுப்பப்பட்டனர்? இதற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்துப் படையினரும் எப்போதும் ஆயுதம் வைத்திருப்பார்கள். ஜூன் 15 ஆம் தேதி கல்வானிலும் படை வீரர்கள் ஆயுதம் வைத்திருந்தனர்.
மோதலின்போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது நீண்டகாலமாக (1996 மற்றும் 2005 ஒப்பந்தங்களின்படி) கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை” என்று தெரிவித்துள்ளார்.