சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை
சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கிப் படையெடுத்ததால் வண்டலூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா தொற்று தீயாய் பரவிய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், எந்தவித விதி மீறலிலும் ஈடுபடாமல் இருந்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 12 நாள் ஊரடங்கு எப்படி இருக்கும் என்றும் விளக்கம் அளித்து அறிவுறுத்தல் செய்த காவல்துறை, யாரும் அலட்சியமாக நடமாட வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.
நேற்றிரவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கி ஏராளமானவர்கள் வாகனங்களில் புறப்பட்டனர்.
இதன் காரணமாக வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுந்தன. இ பாஸ் குறித்த பரிசோதனை நடத்தப்படாத நிலையில், செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கட்டணம் இன்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.