கொரோனா ஏற்படுத்திய மன அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக யோகா இருக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை,
சர்வதேச யோகா தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவத்தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இல்லை. நிச்சயமற்ற மற்றும் கவலைகள் சூழ்ந்த இந்த நேரத்தில் மனதை அமைதியாகவும், உடல் தகுதியையும் பராமரிப்பது மிகவும் முக்கியம் ஆகும். பண்டையகால இந்திய ஒழுக்கமான யோகா, சமீபத்திய தசாப்தங்களில் உலக அளவில் மிகவும் புகழ் பெற்றுள்ளது. யோகா தனிநபரின் மனதையும், உடல் நலனையும் கணிசமாக மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த கருவியாகும்.
உலகம் முழுவதும் பல்வேறு வயதுகளை சார்ந்த கோடிக்கணக்கானவர்கள் சர்வதேச யோகா தினத்தை 21-ந்தேதி (நாளை) கொண்டாடுகின்றனர். கொரோனா தொற்றுநோய் நம்முடைய வாழ்வில் ஏற்படுத்தியிருக்கும் கடுமையான மன அழுத்தத்துக்கு யோகா ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
யோகாவின் நன்மைகளை ஐ.நா. சபை அங்கீகரித்துள்ளது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக ‘வீட்டில் யோகா மற்றும் குடும்பத்தினருடன் யோகா‘ என்று முடிவு செய்திருக்கிறது. எனவே ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து உறுப்பினர்களும் அதன் எண்ணற்ற நன்மைகளை கருத்தில்கொண்டு யோகா பயிற்சி செய்யலாம்.
கொரோனா தொற்று அனைத்து வயதினரையும் கண்மூடித்தனமாக தாக்கும் நிலையில் குறிப்பாக ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான சிறந்த தேர்வாக யோகா இருக்கிறது. நவீன வாழ்க்கை முறை காரணமாக பரவலாக மாறியுள்ள மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை திறம்பட கையாளுவதற்கு யோகா உதவும்.
யோகாவை சேர்க்கவேண்டும்
நவீனகால அழுத்தங்களையும், மன அழுத்தத்தையும் சமாளிக்க முடியாமல் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக செய்திகள் வரும்போது எல்லாம் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். இதுபோன்ற மரணங்கள் அனைத்தும் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை. யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தை குறைப்பதற்கு உதவிக்கரமாக இருக்கும். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துகின்றன. இவ்வாறு நடத்துபவர்கள் தங்களுடைய கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக யோகாவை சேர்க்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
‘யுனிசெப் கிட் பவர்‘ 13 யோகா நீட்சிகளையும் (ஸ்டிரெச்ஸ்), குழந்தைகளுக்கு அதற்கான காட்சிகளையும் பட்டியலிட்டுள்ளது. கொரோனாவின் தொடர் அச்சுறுத்தல் இருப்பதால் நாம் போதுமான முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவேண்டும். நமக்குள்ளே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும். உடல் ரீதியாக சுறு,சுறுப்பாகவும், மன ரீதியாக அமைதியாகவும் இருக்கவேண்டும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான நடைமுறை தீர்வுகள் நம்மிடம் இருப்பதால், இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம். யோகா நம்பமுடியாத எளிமையான, சக்திவாய்ந்த கருவியாகும்.
பொக்கிஷங்களை தட்டவேண்டிய நேரம்
இதேபோல நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளும் பரந்த அளவிலான மசாலா மற்றும் மூலிகைகளும் சம அளவில் உதவிக்கரமாக இருக்கின்றன. மஞ்சள், லவங்கம்பட்டை, இஞ்சி, பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். கொரோனா தொற்று பரவி வரும் சூழ்நிலையில், நமது பாரம்பரியத்தின் பின்னணியில் உள்ள அறிவாற்றலை உலகம் பெரிய அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக ‘நமஸ்தே‘ அல்லது கைகளை கூப்பி மற்றவர்களை வாழ்த்துவது நம்முடைய பாரம்பரியம்.
இது தற்போது பல நாடுகளில் பிரபலமாகி வருகிறது. நமக்குள் இருக்கும் பொக்கிஷங்களை தட்டவேண்டிய நேரம் இது. சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய சுகாதார சவால்களை சமாளிக்க உலகம் போராடிவருகிறது. இந்தசூழ்நிலையில் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவை எதிர்கொள்ள, யோக பயிற்சியின் அறிவியல், அமைதி மற்றும் சமநிலை பற்றிய இந்தியா மற்றும் உலகப்பார்வை, நோய் எதிர்ப்பு ஆற்றல்களை கொண்ட இந்திய உணவு வகைகள் உதவிக்கரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.