புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கியதால், வெளி மாநிலங்களில் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்கள்.
இப்படி திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பீகார், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அங்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை.
இதனால் அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியில் ஏழைகள் நல்வாழ்வுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. மேற்கண்ட 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் 125 நாட்கள் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.கிராமப்புற அபிவிருத்தி, பஞ்சாயத்து ராஜ், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, குடிநீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச்சூழல், ரெயில்வே, பெட்ரோலியம் உள்ளிட்ட 12 அமைச்சகங்களின் கீழ் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடி கட்டி கொடுத்தல், மரம் நடுதல், குடிநீர் சப்ளை, பஞ்சாயத்து, அங்கன்வாடி கட்டிடங்கள், சமூக கழிவறைகள் கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற 25 வகையான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளில், வேலை இல்லாமல் இருக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா பீகார் மாநிலம் கதிகார் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், ஒடிசா மாநில மந்திரியும் கலந்து கொண்டனர்.
திட்டத்தை தொடங்கி வைக்கும் முன் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிலருடன் அவர் காணொலி காட்சி மூலம் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் கூறியதாவது:-
முந்தைய கால கட்டங்களில் பயனாளிகளுக்காக ஒதுக்கப்படும் பணம் அவர்களிடம் சரியாக போய்ச் சேர்ந்தது இல்லை. ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 100 நாட்கள் கண்டிப்பாக வேலை கிடைக்கிறது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பயன் பெறுகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திறமைவாய்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை உருவானது. நகரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த இந்த தொழிலாளர்களால் இனி கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கோரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கிராமங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. அந்த வகையில் கிராமங்கள் நகரங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன. முதல் முறையாக நகரங்களை விட கிராமப்புறங்களில் இணையதள பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இணையதள சேவையின் வேகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.