இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

புதுடெல்லி,
உலக நாடுகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாத வைரசை கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கியும், ஆயிரக்கணக்கானோரின் உயிரையும் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா, தனது ஆட்டத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த வைரசின் பிடியில் இந்தியாவும் சிக்கியுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பலி எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தினந்தோறும் 300 முதல் 400 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இதனால் உலக அளவில் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 375 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 948 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பாதிப்பிலும் கொரோனா புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 14 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 54.12 சதவீதம் பேர் அதாவது, 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிவிட்ட நிலையில், 1 லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டியத்தில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாதிப்பில் 3-வது இடத்தில் இருக்கும் தேசிய தலைநகரான டெல்லியில் 53 ஆயிரத்து 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 26 ஆயிரம் பேரும், உத்தரபிரதேசத்தில் சுமார் 16 ஆயிரம் பேரும், ராஜஸ்தானில் 14 ஆயிரம் பேரும், மேற்குவங்காளத்தில் 13 ஆயிரம் பேரும், மத்தியபிரதேசத்தில் 11 ஆயிரத்து 500 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.
கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் புதிதாக 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆக உயர்ந்து இருக்கிறது.
தமிழகத்தை போலவே அதன் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிலும் கொரோனா பலரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அதன்படி கர்நாடகாவில் 8 ஆயிரத்து 281 பேரும், ஆந்திராவில் 7 ஆயிரத்து 961 பேரும், கேரளாவில் 2 ஆயிரத்து 912 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவில் இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது. புதுச்சேரியில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் 142, டெல்லியில் 66, தமிழகத்தில் 41, குஜராத்தில் 27, உத்தரபிரதேசத்தில் 23, மேற்குவங்காளத்தில் 11, ராஜஸ்தான், அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா 10, மத்தியபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 9, பீகாரில் 6, ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 4, தெலுங்கானாவில் 3 பேர் என மொத்தம் 24 மணி நேரத்தில் 375 பேரின் உயிரை கொரோனா பலி வாங்கி இருக்கிறது.
ஒட்டு மொத்தமாக மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 5,893 ஆக இருக்கிறது. டெல்லியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. குஜராத்தில் 1,618 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் 704 பேரும், மேற்குவங்காளத்தில் 529 பேரும், மத்தியபிரதேசத்தில் 495 பேரும், உத்தரபிரதேசத்தில் 488 பேரும், ராஜஸ்தானில் 333 பேரும் தெலுங்கானாவில் 198 பேரும், அரியானாவில் 144 பேரும், கர்நாடகாவில் 124 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் 96, பஞ்சாபில் 92, ஜம்மு காஷ்மீரில் 75, பீகாரில் 50, உத்தரகாண்டில் 26, கேரளாவில் 21, ஒடிசா மற்றும் ஜார்கண்டில் தலா 11, சத்தீஸ்காரில் 10, அசாமில் 9, இமாசலபிரதேசத்தில் 8, புதுச்சேரியில் 7, சண்டிகாரில் 6, திரிபுரா, லடாக் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது.