தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு விடுதிக்கு பதிலாக, ஆடிட்டோரியத்தை தர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சூரப்பா, மாநகராட்சிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,
சென்னையில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஏதுவாக கல்லூரிகள் மையமாக மாற்றப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் சிலவற்றை தனிமைப்படுத்துபவர்களுக்கான மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஆராய்ச்சி மாணவர்களின் விடுதியையும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு 20-ந்தேதிக்குள் (நேற்று) அதனை ஒப்படைக்கவேண்டும் என்று மாநகராட்சி கூறியிருந்தது.
இந்த நிலையில் அந்த விடுதிகளில் ஆராய்ச்சி மாணவர்களின் உடமைகள், ஆய்வு தொடர்பான பொருட்கள், ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் இருப்பதால் அதனை அகற்றி ஒப்படைப்பது சற்றுசிரமம் என்பதாலும், சில மாணவர்கள் விடுதியில் இருப்பதாலும் குறுகிய காலத்தில் ஒப்படைக்கமுடியாது என்று அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மாநகராட்சியிடம் தெரிவித்தது.
ஆனால் மாநகராட்சி எப்படியாவது ஒப்படைக்க வேண்டும்? என்று மீண்டும் அறிவுறுத்தியது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் விடுதிக்கு பதிலாக ஆடிட்டோரியத்தை தர முடிவுசெய்திருப்பதாக கூறப்படுகிறது.
கடிதம்
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். அதில், ‘விடுதிக்கு பதிலாக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிய கட்டிடத்தை தனிமைப்படுத்தும் மையமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், அங்கு 500 படுக்கை வசதிகள் அமைக்க முடியும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.