தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் பலியானார்கள். புதிதாக 2,532 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் தொற்று 60 ஆயிரத்தை தொடுகிறது.

சென்னை,
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 2 ஆயிரத்து 480 பேர், வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேர், வெளிமாநிலங்களில் இருந்து 47 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 532 பேர் நேற்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 1,579 பேர் ஆண்கள், 953 பேர் பெண்கள் ஆவார்கள்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரசு மருத்துவமனையில் 37 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 53 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 42 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், திருவள்ளூரில் 3 பேரும், விழுப்புரத்தில் 2 பேரும், திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். 50 பேர் பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனா பிடியில் சிக்கியதால் உயிரிழந்து இருக்கின்றனர். 3 பேர் கொரோனாவால் மட்டும் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரையில் கொரோனா 757 பேரின் உயிரை பறித்து உள்ளது. சென்னையில் மட்டும் 601 பேர் இறந்து உள்ளனர்.
சென்னையில் 1,493 பேர்
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் 1,493 பேரும், செங்கல்பட்டில் 121 பேரும், திருவள்ளூரில் 120 பேரும், கடலூரில் 102 பேரும், வேலூரில் 87 பேரும், திருவண்ணாமலையில் 77 பேரும், மதுரையில் 69 பேரும், காஞ்சீபுரத்தில் 64 பேரும், தஞ்சாவூரில் 49 பேரும், திருச்சியில் 36 பேரும், ராமநாதபுரம், திருவாரூர், விழுப்புரத்தில் தலா 30 பேரும், நெல்லையில் 28 பேரும் திண்டுக்கலில் 27 பேரும், நாகப்பட்டினத்தில் 25 பேரும், தென்காசியில் 23 பேரும், கள்ளக்குறிச்சியில் 21 பேரும், விருதுநகரில் 13 பேரும், கோவை, சேலத்தில் தலா 12 பேரும், ஈரோடு, சிவகங்கை, தேனியில் தலா 7 பேரும், அரியலூர், கன்னியாகுமரியில் தலா 6 பேரும், தர்மபுரி, கரூரில் தலா 5 பேரும், திருப்பூரில் 4 பேரும், தூத்துக்குடி, ராணிப்பேட்டை, நாமக்கலில் தலா 2 பேரும், புதுக்கோட்டையில் ஒருவரும் உள்ளனர்.
எத்தனை பேருக்கு பரிசோதனை?
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நேற்று 1,438 பேர் குணம் அடைந்தனர். இதுவரையில் 32 ஆயிரத்து 754 பேர் குணமடைந்து உள்ளனர். சிகிச்சையில் 25 ஆயிரத்து 863 பேர் உள்ளனர். தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 130 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 279 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டனர். இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 934 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 7 ஆயிரத்து 43 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 31 ஆயிரத்து 401 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 8 லட்சத்து 92 ஆயிரத்து 612 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.