தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி முறைப்படுத்தப்படுமா? என்பதற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.
சென்னை,
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு நேற்று காலை சென்றார். அங்கு முதல்-அமைச்சருடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்குவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். சுமார் ஒருமணிநேரம் இந்த ஆலோசனை நடந்தது. இதில் பள்ளிக்கல்வி துறையின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை முடிந்ததும், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 பேர் கொண்ட கல்விக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக்குழுவினர் வருகிற கல்வியாண்டில் பள்ளி வேலைநாட்களின் எண்ணிக்கை குறையும்போது, பாடத்திட்டங்களை எவ்வாறு குறுகிய காலத்தில் கற்றுக்கொடுப்பது குறித்து பல்வேறு கருத்துகள் வழங்க உள்ளனர். அந்தக்குழுவின் அறிக்கை அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதனை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அவருடைய ஒப்புதல் பெற்றபிறகு, பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி திறக்கும்போது உள்ள சிக்கல் கள் குறித்தும் இந்தக்குழுவினர் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்லைன் வழிக்கல்வி
இதையடுத்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- வரும் கல்வியாண்டில் காலாண்டு தேர்வு ரத்து செய்யப்படும் என்று பேசப்படுகிறதே?
பதில்:- அதுபோன்ற முடிவு எதுவும் இப்போது எடுக்கப்படவில்லை.
கேள்வி:- ஆன்லைன் வழிக்கல்வி முறைப்படுத்தப்படுமா
பதில்:- ஆன்லைன் வழிக்கல்வி குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகிறார்கள். நீதிமன்ற வழக்கிலும் ஆன்லைன் வழிக்கல்வி தவிர வேறுவழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் இதைபற்றி ஆய்வு செய்கிறது. மத்திய அரசின் கருத்துகள் வந்ததும் இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.