ரெயில் நிலைய கடைகளில் கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
ரெயில் நிலைய நடைமேடைகளில் தனியார் மூலம் நடத்தப்படும் பன்னோக்கு கடைகளில் ரெயில் பயணிகளுக்கு தேவையான தண்ணீர், பாக்கெட் உணவுகள், புத்தகங்கள், மருந்துகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் ரெயில் பயணிகளுக்காக கொரோனா தடுப்பு பொருட்கள் விற்பனை செய்யவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அந்தவகையில் முககவசம், கிருமிநாசினி, கையுறை, படுக்கை விரிப்புகள் போன்றவை அனைத்தும் ரெயில் நிலைய கடைகளில் விற்பனை செய்யப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொருட்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த நடவடிக்கையால், பயணிகள் தங்கள் வீடுகளில் இருந்து வரும்போது மேற்படி கொரோனா தடுப்பு பொருட்களை எடுத்துவர மறந்தாலும் ரெயில் நிலையங்களிலேயே அவற்றை வாங்கிக்கொள்ள முடியும் எனக்கூறிய அவர்கள், இந்த நெருக்கடி காலத்தில் பயணிகள் கொரோனா அச்சமின்றி பயணிக்க இது உதவும் எனவும் கூறினர்.