லடாக் மோதல் விவகாரம்: இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Spread the love

லடாக் மோதல் தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதன் மூலம் எல்லையில் அமைதி திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

லடாக்கின் கிழக்கே பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த 15-ந்தேதி மீண்டும் இருதரப்பும் வன்முறையில் ஈடுபட்டன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் பலியானார்கள். இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த மோதலால் இருநாட்டு எல்லை முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த 16-ந்தேதி முதல் இருநாட்டு ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக இருநாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் கடந்த 22-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி எல்லையில் படை விலக்கலுக்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவி, இந்திய பகுதிக்குள் முகாமிட்டு உள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.

கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் இதை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இதனால் இருநாட்டு மோதல் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் லடாக் மோதல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் உள்ள சுசுல் செக்டாரின் இந்திய பகுதிக்குள் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்தும், படைகள் விலக்கலுக்கான வழிமுறைகளை இறுதி செய்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசனை நடத்துகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும், சீன தரப்பில் திபெத் ராணுவ படைப்பிரிவு கமாண்டர் தலைமையிலான குழுவும் பங்கேற்கின்றனர். இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடைபெறும் 3-வது பேச்சுவார்த்தை இதுவாகும். முன்னதாக கடந்த 6-ந்தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெறும் இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படுமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page