கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியில் வீட்டில் தயாரிக்கும் முக கவசம் நல்லது – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Spread the love

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பருத்தி துணியைக்கொண்டு வீட்டில் தயாரிக்கிற முக கவசம் நல்லது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நியுயார்க்,

கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி ஒன்றுதான் நிரந்தர தீர்வாக உலக அளவில் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தடுப்பூசி, சந்தைக்கு வர இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

அப்படி தடுப்பூசி சந்தைக்கு வருகிற வரையில், கொரோனாவை தடுத்து நிறுத்துவதற்கு மூன்றே வழிகள்தான் இருக்கின்றன. ஒன்று, முக கவசம், இரண்டு, தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், மூன்றாவது, கை சுத்தம் பராமரித்தல்.

இப்போது முக கவசம் அணிவதில் ஓரளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லோராலும் அதிக விலை கொடுத்து முக கவசம் வாங்குவதில் பொருளாதார ரீதியில் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

இது ஒரு புறம் இருக்க, எத்தகைய முக கவசம் கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காப்பதற்கு உதவும் என்பது பற்றி அமெரிக்காவில் புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டறிந்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் மருத்துவ ரீதியில் அல்லாத முக கவசங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறார்கள். இதில் 2 அடுக்கு மெல்லிய பருத்தி துணிகளை கொண்டு தயாரிக்கப்பட்டு, நன்கு பொருந்துகிற முகக்கவசங்கள் மட்டுமே கொரோனா வைரஸ் தடுப்பில் மிகுந்த பயனுள்ளவையாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த வகை முக கவசங்கள்தான், இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படுகிற நீர்த்திவலைகளின் பரவலை தடுத்து நிறுத்துகிறது. அதே சமயம், பந்தனா பாணி (கைக்குட்டையை மடித்து முகத்தில் கட்டிக்கொள்வது) உறைகள் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்பதே கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், பிசிக்ஸ் ஆப் புளூய்ட்ஸ் (திரவ இயற்பியல்) பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த ஆராய்ச்சியின்போது, லேசரை பயன்படுத்தி இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படுகிற நீர்த்திவலைகளின் பாதைகளை பல்வேறு விதமான முக கவசங்களும் எப்படி எதிர்கொள்கின்றன என்பதை வரைபடமாக கண்டறிந்தனர்.

இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றிருந்த சித்தார்த்த வர்மா இதுபற்றி கூறுகையில், “மருத்துவ தர முக கவசங்களின் செயல்திறன் குறித்து ஏற்கனவே சில ஆய்வுகள் நடந்துள்ளன. தற்போது பயன்படுத்தப்படுகிற துணி அடிப்படையிலான முக கவசங்கள் நம்மால் இப்போது அணுகக்கூடியவையாக உள்ளன. ஆனால் அவற்றை பற்றி நிறைய தகவல்கள் இல்லை. முக கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைப்பதின் பின்னணி என்ன என்பதை நாங்கள் எங்கள் ஆய்வுத்தாளில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில், தளர்வாக மடிந்த முக கவசங்கள் மற்றும் பந்தனா பாணி உறைகள் (கைக்குட்டையை மடித்து முகத்தில் கட்டிக்கொள்வது) நீர்த்திவலைகளை தடுத்து நிறுத்துவதில் எந்த பங்களிப்பையும் செய்யாது என கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டிலேயே பல அடுக்கு பருத்தி துணிகளை கொண்டு தயாரித்து, நன்றாக முகத்தில் பொருந்தக்கூடிய முக கவசங்களே மிகவும் பலன் தரத்தக்கதாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் முக கவசங்கள், சுவாச நோய்க்கிருமிகளை தடுப்பதில் 100 சதவீதம் பயனுள்ளவையாக இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சித்தார்த்த வர்மா கூறி உள்ளார்.

எனவேதான் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதும், முகத்தை மறைத்து கொள்ளுதலும், கை கழுவுதலும் அவசியம்,ஒரு பயனுள்ள தடுப்பூசி வருகிற வரையில் இந்த பரிந்துரைகளைத்தான் நாம் பின்பற்றியாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page