சாத்தான்குளம் சம்பவத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல, கலப்படமற்ற விஷம் – க.பொன்முடி அறிக்கை

Spread the love

‘சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல, கலப்படமற்ற விஷம்‘, என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜெயராஜும், பென்னிக்சும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர் என்று ஒரு இதயமற்ற அறிக்கையை வெளியிட்டதுடன்,

எங்கள் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஏதோ அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்று மரணத்திலும் மனித நேயமின்றி குற்றம் சாட்டியுள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐகோர்ட்டு உத்தரவில் விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகும் கூட இது வழக்கமான லாக்-அப் மரணங்கள் போல் அல்ல என்று சட்ட அமைச்சரே மனசாட்சி இல்லாமல் கூறுவதா? இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருந்தது என்று 14 நாட்களுக்குப் பிறகு உலகத்தையே உலுக்கிய ஒரு இரட்டைக் கொலை விவகாரத்தில் சி.வி.சண்முகம் தெரிவித்திருப்பது கருத்து அல்ல, கலப்படமற்ற விஷம்.

கொலையிலும் கண்துடைப்பு நாடகம் போடுவது கொடிய குற்றமல்லவா? ஐகோர்ட்டு விசாரணை மேற்கொள்ளும்வரை சி.வி.சண்முகம் எங்கே போனார்? ‘அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.,வும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாகத் தோன்றுகிறது‘ என்று எங்கள் கட்சி தலைவரை விமர்சனம் செய்துள்ள சி.வி.சண்முகம், ‘அரசின் மீது பழி போடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது‘, என்கிறார். ஆகவே, இரட்டைக் கொலையை மறைக்கச் சூழ்ச்சி செய்யும் யுக்திதான் அமைச்சர் சண்முகத்தின் அறிக்கை.

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி வேண்டும், என்னும் பதாகைகளைத் தூக்கிப் பிடிப்பதும், வழக்கின் போக்கைக் குலைப்பதற்கும், அரசியலாக்குவதற்கும் தி.மு.க. சதிசெய்து வருகிறது என்று குறை சொல்லும் சி.வி.சண்முகம், அந்த இருவரின் கொடூரமான மரணத்தை ஈவு இரக்கமின்றி கொச்சைப்படுத்தியுள்ளார். ஏழை அழுத கண்ணீர் நீதிபதிகளிடம் முதற்கட்ட நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதை இதுபோன்ற அறிக்கைகள் மூலம் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்கள் தடுக்காமல் இருந்தாலே நீதி நிலைநாட்டப்படும்.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் பாராமல் சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, ஆடிட்டர் ராஜசேகரனை கொடூரமாகத் தாக்கியது, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த மறைந்த டி.என்.சேசனை தாக்கியது, மாநிலத்தின் கவர்னராக இருந்த மறைந்த சென்னா ரெட்டியை திண்டிவனத்தில் வழி மறித்துத் தாக்குதல் நடத்தியது, சொந்தக் கட்சி எம்.எல்.ஏ. தூத்துக்குடி ரமேஷை உருட்டுக் கட்டையால் அடித்து நொறுக்கியது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலனை வாக்கிங் போன போது கூலிப்படை வைத்து கொலை செய்தது என அனைத்தும் நடந்தது.

ஆகவே, நெறி சார்ந்த அரசியல் தெரியாத அமைச்சர் சி.வி. சண்முகம் எங்கள் கட்சி தலைவரின் நெறி சார்ந்த அரசியலைக் கேள்வி கேட்கத் தகுதியும் இல்லை, தார்மீக உரிமையும் இல்லை. ஐகோர்ட்டு அளித்துள்ள உத்தரவின்படி ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலையில் தொடர்புடையவர்கள், உதவியவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page