சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீதும் கொலை வழக்குப்பதிவு

Spread the love

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் போலீஸ்காரர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடிவந்தனர். அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை அறிய முயன்றனர். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முத்துராஜ் மீது கொலை வழக்குப்பதிவு

இந்த நிலையில், காவலர் முத்துராஜ் மீதும் கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராஜ்ஜை காவலில் எடுத்து சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மேற்கூறிய வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திங்கள் கிழமை மனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் காவலில் விசாரணை நடத்தும்போது, எதற்காக தந்தை, மகனை இரவு முழுவதும் தாக்கினார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page