லடாக் பயணம் மூலம் ‘சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருக்கிறார்’ பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டு

Spread the love

லடாக் பயணம் மூலம் சீனாவுக்கு தெளிவான செய்தியை பிரதமர் சொல்லி இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் பாராட்டி உள்ளனர்.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலை தொடர்ந்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் லடாக் எல்லைக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அங்கு எல்லை நிலவரம் பற்றி ஆய்வு செய்த அவர், ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தியும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்வகையிலும் உரையாற்றினார்.

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் இந்த சூழலில் எல்லைக்கு பிரதமர் மேற்கொண்ட இந்த பயணம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் பிரதமரின் பயணத்துக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்தவகையில் ராணுவ முன்னாள் துணைத்தளபதி சுப்ரதா சகா கூறுகையில், ‘பிரதமரின் பயணம் மூலம், கிழக்கு லடாக்கில் இருந்து இந்தியா பின்வாங்கப்போவது இல்லை என்றும், இந்த சூழலை வலிமையான கரத்துடன் கையாள தயாராக இருக்கிறோம் என்பதையும் சீனாவுக்கு உரக்க சொல்லி இருக்கிறார். இந்திய தரப்பில், நமது பிரதமர் பூஜ்ஜிய எல்லை பகுதி வரை சென்று நமது வீரர்களின் தியாகத்தை பாராட்டி இருக்கிறார். இதை சீன தரப்புடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அவர்கள் தங்கள் தரப்பு பலியை கூட ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு சீன வீரரின் மனதில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்துப்பாருங்கள்’ என்று குறிப்பிட்டார்.

ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டிய சகா, இந்த உரை கவர்ச்சிகரமாகவும், மிகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவரது உரை தற்சார்பு இந்தியாவை நோக்கி உழைப்பதற்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருந்தது என்றும் கூறினார்.

பாதுகாப்பு வல்லுனர் லட்சுமண் பெகேரா கூறும்போது, ‘எல்லை பிரச்சினையில் சர்வதேச அளவில் அதிகமான ஆதரவை இந்தியா பெற்று வரும் நிலையில், சீனாவுக்கு மிகவும் தெளிவான செய்தி ஒன்றை பிரதமர் சொல்லி இருக்கிறார். சீனா தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் வல்லரசுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. கிழக்கு லடாக், தென்சீனக்கடல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் சர்வதேச சமூகத்தில் சீனா மெதுவாக அதேநேரம் உறுதியாக தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சர்வதேச மட்டங்களில் சீனாவை பொருளாதார ரீதியாகவும் ஓரங்கட்ட நாம் முயற்சிக்க வேண்டும். அதுவே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் கவனமாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

பிரதமரின் லடாக் பயணத்தை வரவேற்றுள்ள ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அசோக் மேத்தா, ‘டெப்சாங் (2013-ம் ஆண்டு), சுமார் (2013) டோக்லாம் (2017) போன்ற சீனாவின் முந்தைய ஊடுருவல்களைப்போல இல்லாமல் இந்தமுறை ஊடுருவலை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம் என்பதை பிரதமரின் பயணம் சீனாவுக்கு எடுத்துரைத்து இருக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கை அதிக ஆத்திரத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்பதையும், இதற்கு தகுந்த பதிலடி வழங்கப்படும் என்பதையும் அழுத்தமாக சொல்லி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page