கோவையில் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தங்கள் சீருடையில் இணைத்து பயன்படுத்தும் வகையில் உடல் இணை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர்,
கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தனது டுவிட்டர் பக்கத்தில் காவலர்கள் உடல் இணை கேமராக்களை பயன்படுத்தும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த உடல் இணை கேமராக்கள் மூலம் வாகன சோதனையில் ஈடுபடும் காவலர்களிடம் வாகன ஓட்டிகள் டிராபிக்கில் தவறாக சென்றுவிட்டு முறையற்று பேசுவதும், விதிகளை மீறி செல்வதும், தவறு செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும் இந்த இணை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களை போலீசார் தங்கள் சீருடையின் மீது இணைத்து பயன்படுத்த முடியும். விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளும், அவர்களை பிடிக்கும் காவலர்களும் என்ன பேசுகின்றனர் என்பதை தெளிவாக இந்த கேமரா பதிவி செய்யும். இதன்மூலம், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்குகள் பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையும், நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது.
தற்போது கொரோனா நேரத்தில் பணியில் ஈடுப்பட்டிருக்கும் காவலர்களுக்கு இந்த கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தில் நடந்ததுபோல் இல்லாமல் சுமூக தீர்வுக்கு இந்த கேமராக்கள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காவல்துறையினரையும் கண்காணிக்கும் கருவியாகவும் செயல்படுவதாக பார்க்கப்படுகிறது.