சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவம் சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Spread the love

சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த சம்பவத்தில், சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மேலும் 7 நாட்களுக்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்துவது ‘கோவிட் கேர் சென்டர்’-ல் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படி அனுமதிக்கப்படுகிற ‘கோவிட் கேர் சென்டர்’ மதுரை தியாகராஜர் கல்லூரி, மதுரை வேளாண்மை கல்லூரி, மதுரை தியாகராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அங்கு இருக்கக்கூடிய மருத்துவமனை ஆகிய இந்த 4 பெரிய ‘சென்டர்களை’ வைத்துக் கொண்டு, இப்போது தகவல் தொழில் நுட்ப பூங்காவில் ‘கோவிட் கேர் சென்டர்’, அதேபோன்று பாத்திமா கல்லூரி, மீனாட்சி கல்லூரி போன்ற கல்லூரிகளையும் சேர்த்து 21 சென்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். தற்போது 3 சென்டர்களில் தொற்று ஏற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு 3 வேளையும் சுகாதாரமான, சுவையான, ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிற சத்தான உணவை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்ததை கொலை வழக்காக முறையாக விசாரித்து ஒழுங்காக, விரைவாக, நீதியை நிலைநாட்டுகிற நடவடிக்கையை இன்றைக்கு எடுத்து வருகின்றோம். ஆனால், தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சி.பி.ஐ. விசாரணை கேட்டு தி.மு.க. வழக்கு தாக்கல் செய்யும் என்று கடந்த 27-ந்தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ட்விட்’ செய்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான், சி.பி.ஐ. வசம் விசாரணையை ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதுவும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இவ்வழக்கை நேரடியாக விசாரித்து வருவதால் ஐகோர்ட்டு மதுரை கிளையின் ஒப்புதலோடு இவ்வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என்று தெளிவாக அவர் தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாடு அரசு சாத்தான்குளம் வழக்கை சரியான முறையில் விசாரணை மேற்கொள்வதால் சத்தியத்தின் பக்கம் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மருத்துவ உபகரணம் வாங்க ரூ.6,500 கோடி கொடுத்ததாக சொல்கிறார்களே…

பதில்:- மத்திய அரசில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய நிதியை யார் வேண்டுமானாலும் கையாள முடியாது. அதற்கான கடிதமும், நிதி வழங்கக்கூடிய அளவும் நிதித்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு, நிதி அமைச்சரின் ஒப்புதலோடு முதல்- அமைச்சர் கொடுக்கின்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு தான் பயன்பட்டு வரும். கணக்கு நிச்சயமாக அரசிடத்தில் இருக்கிறது. தற்போது மக்களை காக்கின்ற பணியில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது. இது அரசியலுக்காக கேட்கப்படுகிற கேள்வி.

கேள்வி:- சாத்தான்குளம் கொலை வழக்கில் கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. விசாரணை பின்வாங்கப்படுமா?

பதில்:- நீதிமன்றத்தின் வழிகாட்டுதல், உத்தரவுப்படி சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் அரசாணை வெளியிட்டு இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஒரு நிமிடம் கூட வழக்கு தாமதமாக கூடாது என்று நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்று தான், தற்போது சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கேள்வி:- மதுரையில் 7 நாள் ஊரடங்கு உள்ளதால் போதிய பலன் கிடைக்குமா? அல்லது மறுபடியும் ஊரடங்கு நீட்டிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- இந்த நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக அதிகமான மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்துவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதன்படி 1,400 சுகாதாரத்துறை பணியாளர்கள், மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ 1,000 பேர்களுக்கு மேல் மகளிர் சுய உதவிக் குழுக்களில் தேர்வு செய்யப்பட்டு, கிராமம் கிராமாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, ஆரம்பத்திலே நோயை குணப்படுத்துவதற்கு இந்த ஊரடங்கு நமக்கு பெரும் வாய்ப்பை தருகிறது. எனவே தான் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது, தளர்வுகளும் விழிப்போடு கையாளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page