இந்தியாவில் பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது கொரோனாவுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு

Spread the love

இந்தியாவில் பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது கொரோனாவுக்கு 20 ஆயிரம் பேர் உயிரிழப்பு


புதுடெல்லி,-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த வைரஸ் தொற்றால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிவேகமெடுத்துள்ளது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் அடுத்த 49 நாட்களில் 6 லட்சம் பேரை தாக்கி இருக்கிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவர பட்டியலில், 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 252 பேரை நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கிய கொரோனா, புதிதாக 467 பேரின் உயிரையும் பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 665 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 160 ஆகவும் அதிகரித்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலமே முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு இந்த நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்த்து 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியிலும் ஏற்கனவே பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது.

இதற்கு அடுத்த இடங்களில் உள்ள குஜராத், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்காளம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரை உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழே உள்ளது.

பலி எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், மராட்டியத்தில் 9,026 பேரும், டெல்லியில் 3,115 பேரும், குஜராத்தில் 1,960 பேரும், தமிழகத்தில் 1,637 பேரும், உத்தரபிரதேசத்தில் 809 பேரும், மேற்குவங்காளத்தில் 779 பேரும், மத்தியபிரதேசத்தில் 617 பேரும், ராஜஸ்தானில் 461 பேரும், கர்நாடகாவில் 401 பேரும், தெலுங்கானாவில் 306 பேரும், அரியானாவில் 276 பேரும், ஆந்திராவில் 239 பேரும், பஞ்சாபில் 169 பேரும், ஜம்மு காஷ்மீரில் 138 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 61.13 சதவீதம் பேர் அதாவது, 4 லட்சத்து 39 ஆயிரத்து 948 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page