11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை: தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க சபாநாயகருக்கு நோட்டீஸ் – சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the love

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

புதுடெல்லி,

ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு எதிராக வாக்கு அளித்தனர்.

எனவே அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் பி.தனபாலிடம் தி.மு.க. மனு அளித்ததாகவும் அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தி.மு.க. மற்றும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 14-ந் தேதியன்று பிறப்பித்த உத்தரவில், “சம்பந்தப்பட்ட உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் இந்த மனு செயலற்றதாகிறது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார்“ என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

இந்த நிலையில், தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், “சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்“ என்று கோரப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக சட்டசபை செயலாளர், சபாநாயகர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page