போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவில் விசாரித்ததால் நடவடிக்கை

Spread the love

புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவில் விசாரித்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டது.


சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் மணிவண்ணன். இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த போலீஸ் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்துகள் செய்வது, குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது, புகார் அளிக்கும் பெண்களிடம் நள்ளிரவில் செல்போனில் புகார் குறித்து விசாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்து வந்தது.

மேலும் ஊரடங்கு காலத்தில் பொது இடங்களில் சுற்றிய இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அதனை விடுவிக்க தனக்கு வேண்டிய ஒரு புரோக்கர் மூலம் பணம் பெற்றுக்கொண்டு பிடிபட்ட வாகனங்களை திருப்பி தந்ததாகவும் மக்களிடமிருந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் குவிந்தன. அத்துடன் போலீஸ் நிலையத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், ஒருமையில் அவர்களை திட்டுவதாகவும் புகார்கள் சென்றன.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் மணிவண்ணன் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது புகார் அளித்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் செல்போனில் அழைத்து விசாரணை நடத்தி உள்ளார். அவர், அடிக்கடி நள்ளிரவில் புகார் அளித்த பெண்ணிடம் பேசியதால் அந்தப் பெண் அப்போதைய திருச்சி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.

இதுபற்றி டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மீது வந்த புகார் உண்மை என்று தெரியவரவே, அவருக்கு கடந்த மாத இறுதியில் கட்டாய பணி ஓய்வு வழங்க டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே டி.ஐ.ஜி. சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு அந்த உத்தரவு நகல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் தனக்கு பணி ஓய்வு வழங்கப்பட்ட, உத்தரவு நகல் வருவதை அறிந்த மணிவண்ணன் கடந்த 3 நாட்களாக போலீஸ்நிலையத்திற்கு வராமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பணிக்கு வந்த மணிவண்ணனுக்கு கட்டாய பணி ஓய்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்டு அவர் அங்கிருந்து வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page