நாடு முழுவதும் ஒரே நாளில் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 551 பேர் உயிரிழந்தும் இருக்கிறார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய வேகம் எடுத்து இருக்கிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 28 ஆயிரத்து 637 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து 3-வது நாளாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் தொற்று ஏற்பட்டோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பரவலில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 600 ஆகும். இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடர்கிறது.
மூன்றாம் இடத்தை டெல்லி வகிக்கிறது. அங்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 921 பேருக்கு தொற்று உள்ளது.
4-ம் இடத்தில் குஜராத்தும் (40 ஆயிரத்து 941), 5-வது இடத்தில் கர்நாடகமும் (36 ஆயிரத்து 216), 6-வது இடத்தில் உத்தரபிரதேசமும் (35 ஆயிரத்து 92), 7-ம் இடத்தில் தெலுங்கானாவும் (33 ஆயிரத்து 402), 8-ம் இடத்தில் மேற்கு வங்காளமும் (28 ஆயிரத்து 453), 9-ம் இடத்தில் ஆந்திராவும் (27 ஆயிரத்து 235) 10-ம் இடத்தில் ராஜஸ்தானும் (23 ஆயிரத்து 748) உள்ளன.
10 ஆயிரத்துக்கு அதிகமான தொற்று பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் அரியானா, மத்திய பிரதேசம், அசாம், பீகார், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் இடம் பிடித்துள்ளன.
கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை 551 ஆக இருக்கிறது.
அதிகபட்சமாக மராட்டியத்தில் 223 பேரும், கர்நாடகத்தில் 70 பேரும் பலியாகி உள்ளனர்.
நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.
இதிலும் மராட்டியம்தான் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு 10 ஆயிரத்து 116 பேர் பலியாகி இருக்கிறார்கள். இரண்டாம் இடத்தில் டெல்லி (3,334) இருக்கிறது. மூன்றாவது இடம் குஜராத்துக்கு (2,032) கிடைத்திருக்கிறது. தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.
கொரோனாவுக்கு 500-க்கும் மேற்பட்டோர் இரையாகி இருக்கிற மாநிங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் (913), மேற்கு வங்காளம் (906), மத்திய பிரதேசம் (644), கர்நாடகம் (613), ராஜஸ்தான் (503) ஆகியவை இடம் பிடித்துள்ளன. கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொற்றுடன், நாள்பட்ட வியாதிகளின் பாதிப்பு சேர்ந்து பலியாகி இருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதுபோலவே குணம் அடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதித்து, சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து 5 லட்சத்து 34 ஆயிரத்து 620 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
தற்போது தொடர் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 ஆகும். இது 62.93 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரப்படி சனிக்கிழமை ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 151 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 87 ஆயிரத்து 153 ஆகும்.