ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.
கான்பெர்ரா,
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம்.
சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஸ்காட் மாரிசன் தற்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி கல்வி மற்றும் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஹாங்காங் மக்களுக்கு 5 வருடம் விசா நீட்டிப்பு வழங்கவும் இதன் வழியாக நிரந்தர குடியுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஹாங்காங்கை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிர்காலத்தில் குடிபெயரவும் வழிவகை செய்யப்படும் ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா தனது செயலுக்கான முழு விளைவையும் ஏற்கும் என சீனா எச்சரித்துள்ளது.