தமிழகத்தில் ‘டாஸ்மாக்‘ மதுக்கடைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இனி பில் இல்லாமல் ஒரு பாட்டில் கூட வாங்க முடியாது.
சென்னை,
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சார்பில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 300 மதுக்கடைகள் உள்ளன. அனைத்து மதுபான கடைகளும் ஓராண்டுக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும் என்ற முடிவை ‘டாஸ்மாக்‘ நிர்வாகம் எடுத்துள்ளது. இதையொட்டி அனைத்து மதுபான கடைகளிலும் பில் போடுவதற்கான ‘பில்லிங் கருவி‘யும், ‘பார் கோடு கருவி‘யும் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி கம்ப்யூட்டரில் பதிவு செய்யாமல், பில் போடாமல் ஒரு பாட்டில் கூட இனி மதுக் கடைகளில் வாங்க முடியாது.
மேலும் இந்த நடவடிக்கை மூலம் மதுக் கடையில் உள்ள மதுபாட்டில்களின் இருப்பு எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் கம்ப்யூட்டர் மூலமாகவே கடைகளுக்கு தேவையான பாட்டில்களின் விவரத்தையும் ரக வாரியாக அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகங்களுக்கு ‘ஆர்டர்‘ கொடுத்துவிட முடியும்.
6 மாதத்தில் பரீட்சார்த்த முறையில் ஒரு மாவட்டத்தில் மட்டும் இந்த நடவடிக்கை கையாளப்பட இருக்கிறது. ஓராண்டுக்குள் அனைத்து கடைகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட உள்ளது.
‘டாஸ்மாக்‘ கடைகள் கம்ப்யூட்டர் மயமாகும்போது, இனி கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ய முடியாது. மதுபான விற்பனையில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும். ‘டாஸ்மாக்‘ கடைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுவதில், உரிய நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை ‘டாஸ்மாக்‘ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.