சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த வணிக வளாகம் மற்றும் உணவு தானிய மொத்த விற்பனை கடைகள், பழம், பூ மொத்த மார்க்கெட்டுகள் அனைத்தையும் உடனடியாக திறக்க வலியுறுத்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் டி.கார்த்திகேயன் ஆகியோருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவை பரிசீலித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், என்னை (ஏ.எம்.விக்கிரமராஜா) நேற்று நேரில் அழைத்து, முதல்- அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனை பெற்று, உரிய வழிகாட்டுதல்களுடன் கோயம்பேடு வணிக வளாகத்தை திறந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு
எனவே 16-ந்தேதி அன்று (நாளை) மாலை நடைபெற இருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் நல்ல முடிவினை எடுத்து, கோயம்பேடு வணிக வளாகத்தை உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய நம்பிக்கையுடன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.