தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1½ லட்சத்தை தாண்டியது. புதிதாக 4,496 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 5 ஆயிரம் குணம் அடைந்தனர். 68 பேர் உயிரிழந்தனர்.

சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவுக்கு அரசு மருத் துவமனையில் 48 பேரும், தனியார் மருத்துவமனையில் 20 பேரும் என 68 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் சென்னையில் 23 பேரும், மதுரை, திண்டுக்கலில் தலா 5 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, விருதுநகர், சிவகங்கையில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், தேனி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா இருவரும், திருவண்ணாமலை, திருவள்ளூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், ஈரோடு, கோவையில் தலா ஒருவரும் அடங்குவர்.