காமராஜரை போன்று ‘தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம்’ – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Spread the love

காமராஜரை போன்று தமிழக அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று, பீடு நடைபோடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


சென்னை,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

“தென்னாட்டு காந்தி”, “படிக்காத மேதை”, “கர்மவீரர்” என்று அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடும் இவ்வேளையில், அவரைப் பற்றி நினைவு கூர்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.

1903-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி பிறந்த பெருந்தலைவர், நாட்டுக்காக உழைப்பதையே தனது லட்சியம் என கொண்டிருந்தார். நமது தாய்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டதால், ஆங்கிலேய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பின்னர் சுதந்திர போராட்டத்திற்காக பலமுறை சிறை சென்ற தியாகசீலர். திருமணமும், இல்லறமும் சமுதாயப் பணிக்கு தடையாக இருக்கும் என பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தவர்.

1954-ம் ஆண்டில், அப்போதைய சென்னை மாநில முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெல்லாம் பள்ளிக்கூடங்களை அமைத்து, தமிழ் சமுதாயத்தை படிப்பறிவு மிக்க அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்கினார். பல தொழிற்சாலைகளை நிறுவி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அதுபோல, நீர்வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய பெருமைக்குரியவர் காமராஜர்.

“காமராஜருடைய எளிமை, தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வசீகரித்து இருக்கிறது. காமராஜர் உடையில் மட்டுமல்ல, உணவில், பிறருடன் பழகுவதில், மேடை பேச்சு, இப்படி எல்லாவற்றிலும் அவருடைய ஒளி வீசியது” என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரை மனதார பாராட்டி உள்ளார்.

காமராஜருக்கு அருகில் எப்போதும் ஒரு கைப்பெட்டி இருந்ததாகவும், அதைத் தான் பலமுறை பார்த்திருப்பதாகவும், ஆனால் அப்பெட்டியில் என்ன இருக்கிறது என யூகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் காமராஜரின் மறைவுக்கு பின்னர் அப்பெட்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அப்பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் அவரது அன்னையின் படம் இருந்தது எனவும், இது அன்னையின் மீது அவருக்கு இருந்த பாசத்தை காட்டுவதாகவும் எம்.ஜி.ஆர்., கர்ம வீரரைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

தன்னை பெற்ற தாயின் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை போலவே, காமராஜர் தாய்த்திருநாட்டின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்தார். எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர், தனது பதவியை விட தேசப் பணியே முக்கியம் என எப்போதும் நினைத்தவர். அதன் காரணமாகவே தனது முதல்-அமைச்சர் பதவியையும் துறந்து நாட்டுக்காகப் பணியாற்றியவர். அகில இந்திய அளவிலும் தலைவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். இந்திய அரசின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருதினைப் பெற்றவர்.

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், கல்வியில் முன்னேற்றம், தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம், நீர்வளத்தில் முன்னேற்றம் என தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருந்தபோது அனைத்து துறைகளிலும் முத்திரையை பதித்த பெருந்தலைவர் காமராஜரைப் போன்று தமிழக அரசும் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று, பீடு நடைபோடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page