அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடியாக பிரசார மேலாளரை நீக்கினார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அசுர வேகம் எடுத்துள்ள நிலையில், நவம்பர் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி டிரம்புக்கும், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தற்போதைய கருத்துக்கணிப்புகளில் டிரம்பை ஜோ பிடன் முந்துகிறார். இது டிரம்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த சூழலில், தேர்தல் நெருங்கி வரும் தருணத்தில் டிரம்ப் அதிரடியாக தனது பிரசார மேலாளர் பிராட் பர்ஸ்கேலை நீக்கிவிட்டார். அவருக்கு பதிலாக பில் ஸ்டீபியனை பிரசார மேலாளராக டிரம்ப் நியமித்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிரம்பின் கள மேலாளராக பணியாற்றியவர்ஆவார்.
கடந்த மாதம் ஓக்லஹாமாவில் நடந்த டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பெருமளவு கூட்டம் கூடவில்லை. இதற்கு அவரது பிரசார மேலாளர் பிராட் பர்ஸ்கேலை டிரம்பின் மூத்த ஆலோசகர்களான அவரது மகள் இவான்கா டிரம்பும், மருமகன் ஜாரட் குஷ்னரும் குறை கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக பிராட் பர்ஸ்கேல் கூறி வந்த நிலையில், வெறும் 6,200 பேர் மட்டுமே கலந்து கொண்டது அதிர்வுகளை ஏற்படுத்தியது.
பிரசார மேலாளர் பொறுப்பில் இருந்து இப்போது பிராட் பர்ஸ்கேல் நீக்கப்பட்டாலும், அவர் மூத்த ஆலோசகராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி டிரம்ப் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிராட் பர்ஸ்கேல் மிக நீண்ட காலமாக எனது மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் தரவு உத்திகளை வழிநடத்தி வந்துள்ளார். அவர் அதில் தொடர்வார். பிரசாரத்தில் மூத்த ஆலோசகராகவும் இருப்பார்” என கூறி உள்ளார். இதற்கிடையே பிராட் பர்ஸ்கேல் கடந்த சில வாரங்களாகவோ ஓரம் கட்டப்பட்டு வந்துள்ளதாக வாஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போது டிரம்பின் புதிய பிரசார மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள பில் ஸ்டீபியன், நியு ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டியின் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.