பில்கேட்ஸ், எலன் மஸ்க், ஒபாமா உள்ளிட்டோரின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் புகுந்து ‘பிட்காயின்’ மோசடி

Spread the love

அமெரிக்காவில் பில்கேட்ஸ், எலன் மஸ்க், ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் சட்டவிரோதமாக புகுந்து, ‘பிட்காயின்’ மோசடியில் ஈடுபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

 


வாஷிங்டன்,

உலகமெங்கும் குறுந்தகவல்களை பதிவிடுவதற்காக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளம் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரையில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில், வர்த்தகம் என பல துறை பிரபலங்களும் ‘டுவிட்டர்’ கணக்குகளை வைத்துக்கொண்டு, அவற்றில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படிப்பட்ட பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபலங்களான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன அதிபர் பில் கேட்ஸ், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், ‘அமேசான்’ நிறுவனர் ஜெப் பெஸோஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கும் ஜோ பிடன், ‘ராப்’ பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்டவர்களின் ‘டுவிட்டர்’ கணக்குகள் ’ஹேக்’ செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஊடக அதிபர் மைக் புளூம்பெர்க், வாடகைக்கார் நிறுவனம் ‘ஊபர்’, ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ‘ஆப்பிள்’ ஆகியவற்றின் ‘டுவிட்டர்’ கணக்குகளும் ‘ஹேக்’ செய்யப்பட்ட ‘டுவிட்டர்’ கணக்குகளில் அடங்கும்.

‘பிட்காயின்’ வடிவில் நன்கொடை

இந்த பிரபலங்களின் ‘டுவிட்டர்’ கணக்குகளில் அவ்வாறு சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக நுழைந்த நபர்கள் அவற்றில் நன்கொடைகளை ‘பிட்காயின்’ வடிவத்தில் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ‘பிட்காயின்’ என்பது இன்றைக்கு உலகளாவிய ஒரு மெய்நிகர் நாணய வடிவமாக இருக்கிறது. கண்களால் பார்க்க முடியாத ஒரு பிட்காயினின் தற்போதைய மதிப்பு ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். கணினிகளை ‘ஹேக்’ செய்கிறவர்கள், அதை முடிவுக்கு கொண்டு வர ‘பிட்காயின்’ வடிவத்தில் பணம் செலுத்துமாறு கடந்த காலத்தில் நிபந்தனை விதித்த சம்பவங்கள் வெளிநாடுகளில் நடந்துள்ளன.

பில் கேட்ஸ் டுவிட்டரில் பதிவு

அதைப் போலவே ‘மைக்ரோசாப்ட்’ அதிபர் பில் கேட்ஸ் ‘டுவிட்டர்’ கணக்கில் நுழைந்த நபர்கள், “எல்லோருமே என்னை திருப்பித்தரும்படி கேட்கிறார்கள். நீங்கள் 1000 டாலர் அனுப்புங்கள். நான் அதை 2 ஆயிரம் டாலராக திருப்பித்தருகிறேன்” என பதிவிட்டுள்ளனர்.

இது தனது ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் என்றும், அவர்கள் இப்படியாக ‘டுவிட்டர்’ கணக்குகளில் நுழைந்து, அதை சம்மந்தப்பட்டவர்களின் பதிவுகளை கட்டப்படுத்த பயன்படுத்தினர் என்பதும் தங்களுக்கு தெரியும் என ‘டுவிட்டர்’ நிறுவனம் கூறியது.

‘டுவிட்டர்’ கணக்குகள் சட்டவிரோதமாக ‘ஹேக்’ செய்யப்பட்டிருப்பதை அறிந்த உடனேயே, இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட நபர்களின் செயல்களை கட்டுப்படுத்த உடனடியாக அந்த நிறுவனத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது பற்றி ‘டுவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த நாள் எங்களுக்கு கடினமான நாள். நடந்ததை நாங்கள் அனைவரும் பயங்கரமாக உணர்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். இணைய பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கின் இணைநிறுவனர் டிமிட்டிரி ஆல்பெரோவிட்ச், இது பற்றி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “இது சமூக ஊடக தளத்தின் மோசமான ஹேக்” என குறிப்பிட்டார்.

பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்கில் நுழைந்ததுபோல எலன் மஸ்க் டுவிட்டர் கணக்கில் நுழைந்த நபர்கள், அடுத்த 30 நிமிடங்களுக்கு பிட்காயின் வடிவத்தில் செலுத்தப்படுகிற தொகை இரட்டிப்பாக திருப்பித்தரப்படும் என பதிவிட்டனர். அது மட்டுமின்றி, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தாராளமாக உணர்ந்து இப்படி தர முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்படி செய்யப்பட்ட அனைத்து பதிவுகளும் சில நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அதற்கு முன்பாகவே லட்சக்கணக்கான டாலர்கள் நன்கொடையாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடி அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page