ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் நடந்ததாக வெளியான தொலைபேசி உரையாடல் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கோரிக்கை விடுத்து உள்ளது.

புதுடெல்லி,
ராஜஸ்தானில் முதல்-மந்தரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக துணை முதல்-மந்திரி பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். சட்டசபை காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத அவருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து அவர்கள் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் குதிரை பேரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் நேற்று முன்தினம் 2 தொலைபேசி உரையாடல்கள் வெளியாயின.
இதைத்தொடர்ந்து, குதிரை பேரத்தின் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து அசோக் கெலாட் அரசை கவிழ்ப்பது தொடர்பாக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத், சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ. பன்வர்லால் சர்மா ஆகியோர் தொலைபேசியில் பேசி இருப்பதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முதலில் இது தொடர்பாக பன்வர்லால் சர்மா பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சஞ்சய் ஜெயினுடன் பேசியதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைமை கொறடா மகேஷ் ஜோஷி இந்த ஆடியோ உரையாடல் விவகாரம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பன்வர்லால் சர்மா, சஞ்சய் ஜெயின், கஜேந்திர சிங் செகாவத் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ஆனால் ஆடியோ உரையாடலில் இடம் பெற்று இருப்பது தங்களுடைய குரல் அல்ல என்று மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தும், பன்வர்லால் சர்மாவும் மறுத்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் அரசியல் நாடகத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அங்கு சதி, மோசடி நடைபெறுவதோடு, சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
அங்கு கடந்த 2018-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. கடந்த 18 மாதங்களாக தானும் சச்சின் பைலட்டும் பேசிக் கொண்டதில்லை அசோக் கெலாட்டே நிருபர்களிடம் கூறி இருக்கிறார்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே அங்கு இரு கோஷ்டியினரும் சாலையில் சண்டை போட்டுக் கொண்டனர். அதன்பிறகு அந்த விவகாரம் கட்சி மேலிடத்துக்கு சென்று, இப்போது கோர்ட்டுக்கு சென்று இருக்கிறது.
அவர்கள் கூறியுள்ள தொலைபேசி உரையாடல் உண்மையானால் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. அந்த உரையாடலை பதிவு செய்யது யார்? அதற்கு உத்தரவிட்டது யார்? தனி நபர்களின் தொலைபேசி உரையாடலை ராஜஸ்தான் அரசு பதிவு செய்கிறதா? இதற்கு அந்த மாநில அரசு பதில் சொல்லியாக வேண்டும். தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பது, பதிவு செய்வது போன்றவற்றில் கடந்த காலத்திலும் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது.
தொலைபேசி உரையாடலை பதிவு செய்வதற்கு அரசு சில விதிமுறைகளை வகுத்து உள்ளது. அதற்கான அதிகாரம் பெற்ற அமைப்புகள் மட்டுமே அதை செய்ய முடியும்.
ராஜஸ்தானில் நடந்தது அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் ஆகும். எனவே இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.