ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் வசுந்தரா ராஜே காங்கிரசில் நிலவும் குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்-மந்தரி அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
மாநிலத்தில் நிலவும் இந்த அரசியல் நெருக்கடிக்கு பா.ஜ.க.தான் காரணம் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
எனினும் பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரியுமான வசுந்தரா ராஜே இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தார்.
கடும் அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் அவரது மவுனம் பல்வேறு யூகங்களை எழுப்பிய நிலையில், வசுந்தரா ராஜே, முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிக்கிறார் என பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் குற்றம் சாட்டியது.
இது ராஜஸ்தான் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பாக வசுந்தரா ராஜே முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பத்திற்கு மக்கள் விலை கொடுத்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் குழப்பம் காரணமாக மக்கள் விலை கொடுத்து வருகின்றனர். இது மிகவும் துரதிர்ஷ்ட வசமானது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் பாஜகவை இணைத்துப் பேசுவது சரியல்ல. பாஜக தலைவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கண்டனத்துக்குரியது.
கொரோனா, வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் பாதிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மக்களை பற்றி நினைக்க வேண்டும்.
ஒருசிலர் எந்த உண்மையும் இல்லாமல் ராஜஸ்தான் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து குழப்பத்தை பரப்ப முயற்சிக்கின்றனர். நான் கடந்த 30 ஆண்டுகளாக கட்சியின் விசுவாசமான பணியாளராக மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். நான் இப்போதும் எப்போதும் எனது கட்சி மற்றும் அதன் சித்தாந்த்துடன் உறுதியாக நிற்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.