கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 10-வது நாடாக ஈரான் உள்ளது.

டெக்ரான்,
கொரோனா வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் 10-வது நாடாக ஈரான் உள்ளது. அங்கு சுமார் 2.70 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், அந்த நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி, கொரோனா வைரஸ் பணிக்குழு கூட்டத்தில் பேசுகையில், “ஈரானில் 2½ கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கலாம். இனி வரும்மாதங்களில் 3 கோடியில் இருந்து 3½ கோடி வரையிலானவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம்” என கூறினார். அவர் வெளியிடப்படாத சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசு புள்ளி விவரத்துக்கும், அதிபரின் தகவலுக்கும் இடையே பெரும் முரண்பாடு இருப்பது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையொட்டி அதிபரின் செய்தி தொடர்பாளர் அலிரெசா மொய்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “அதிபர் ரூஹானி மேற்கொள் காட்டிய சுகாதார அமைச்சக தகவல், ஈரானியர்கள் எந்த அளவில் வைரசுக்கு ஆளாகி இருக்கலாம் என்பதை காட்டுவதாகும்” என கூறி உள்ளார்.