போலி சான்றிதழுடன் எத்தனை பெட்ரோல் நிலையம் செயல்படுகின்றன? பதில் அளிக்க போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Spread the love

சென்னையில் போலி சான்றிதழ் மூலம் எத்தனை பெட்ரோல் நிலையம் செயல்படுகின்றன? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


சென்னை,

சென்னை மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கவேண்டும் என்றால், அதற்கு சென்னை போலீஸ் கமிஷனரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் ஆகும். இந்த சான்றிதழ் சமர்ப்பித்தால்தான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை

நிலையத்துக்கு உரிமம் வழங்கும். இந்த சான்றிதழை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பெயரில் போலியாக தயாரித்து வழங்கிய ஆர்.கே.நகரை சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். சிவகுமார் மீது கடந்த பிப்ரவரி மாதம் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

இந்தநிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யகோரி சென்னை ஐகோர்ட்டில், சிவக்குமாரின் மனைவி லலிதா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், “சென்னையில் பல பெட்ரோல் நிலையம் தொடங்க கமிஷனர் பெயரில் போலி தடையில்லா சான்றிதழ் தயாரித்து மனுதாரரின் கணவர் கொடுத்துள்ளார். அதனால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், “போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குற்றவியல் வக்கீல், “கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி வரை இந்த கும்பலிடம் போலி தடையில்லா சான்றிதழ் பெற்று சென்னை மாநகரில் 32 பெட்ரோல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கும், நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கும் 32 கடிதங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பியும், இதுவரை பதிலும் இல்லை. கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 8-ந்தேதி நினைவூட்டல் கடிதமும் போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

“மார்ச் மாதம் வரை 32 போலி சான்றிதழ் என்றால், அதன்பின்னர் நடந்த புலன் விசாரணையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?” என்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, “தற்போது வரை 74 போலி தடையில்லா சான்றிதழ்களை இந்த கும்பல் வழங்கியிருப்பதும், அதனடிப்படையில் பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது” என்று குற்றவியல் வக்கீல் பதில் அளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், “போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஏதாவது, ஒரு அசம்பாவிதம் நடந்து, உயிர் சேதம் ஏற்பட்டால் யார் இழப்பீடு வழங்குவார்கள்? சட்டரீதியான பல பிரச்சினைகள் வராதா?” என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கில், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமை கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்கள், போலீஸ் அனுப்பிய 32 கடிதங்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

அதேபோல, சென்னையில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையம் போலி தடையில்லா சான்றிதழ்களுடன் இயங்கி வருகின்றன? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். மனுதாரரின் கணவர் சிவக்குமார் உடல்நலம் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page