கொரோனா தொற்று பாதிப்புள்ள நேரத்திலும் இந்தியா சிறந்த முதலீட்டுக்கான நாடாக திகழ்கிறது பா.ஜ.க. தேசிய ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலுனி தகவல்

சென்னை,
கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலும், சிறந்த முதலீட்டுக்கான நாடாக இந்தியா திகழ்கிறது என்று பா.ஜ.க. தேசிய ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலுனி கூறினார்.
இதுகுறித்து பா.ஜ.க. தேசிய ஊடகப் பிரிவுத் தலைவரும், எம்.பி.யுமான அனில் பலுனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள காலகட்டத்தில்கூட, இந்தியா சிறந்த முதலீட்டுக்கான நாடாக உள்ளது. கடந்த 2 அல்லது 3 மாதங்களில் இந்தியாவில் ரூ.1.50 லட்சம் கோடி (20 பில்லியன் அமெரிக்க டாலர்) அளவுக்கும் மேலாக வெளிநாட்டு முதலீடுகள் வருவதை பார்க்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி அரசு மீதும், இந்தியாவின் கட்டமைப்பின் மீதும் உலக நாடுகள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையான ஊரடங்கு காலகட்டங்களில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளின் விவரம் வருமாறு:-
கூகுள் நிறுவனம், 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (74 ஆயிரத்து 926 கோடி ரூபாய்) இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. உலகத்தில் உள்ள மிகப் பரிய சமூக வலைதளமான பேஸ்புக் என்ற முகநூல் நிறுவனம், இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோவிடம் 5.7 பில்லியன் டாலரை முதலீடு செய்கிறது. மற்றொரு நிறுவனத்தில் ‘பேஸ்புக்’ நிறுவனம் செய்யும் மிகப் பெரிய முதலீடு இதுதான்.
மேலும், வால்மார்ட்- 1.2. பில்லியன் அமெரிக்க டாலர், ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனம் பாக்ஸ்கான்- 1 பில்லிய டாலர், குவால்காம் வென்சர் – 97 மில்லியன் டாலர், தாம்சன் நிறுவனம்- 142.8 மில்லியன் டாலர், வி வொர்க் குளோபல்- 100 மில்லியன் டாலர்,
ஹிட்டாச்சி- 15.9 மில்லியன் டாலர், கியா மோட்டார்ஸ்- 54 மில்லியன் டாலர், சவுதி அரேபியாஸ் பிஐஎப்- 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்கின்றன.
எதிர்கால வாகனங்களுக்கான சாப்ட்வேர் மேம்பாட்டுக்காக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது தொழில்நுட்ப மையத்தை விரிவாக்கம் செய்கிறது. இதன் மூலம் இந்தியாவில் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியை வலுப்படுத்த விரும்புகிறது.
‘அமேசான்’ நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய பங்குதாரர் நிறுவனமான எஸ்ஜிஎஸ், இந்தியாவில் முதல் சோதனைக் கூடத்தை திறக்கவுள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட மேல் நாடுகளிலும் இதை அந்த நிறுவனம் தொடக்க உள்ளது.
‘ஆகஸ்டிரியா’ நிறுவனம், ‘கிளவுட் சாப்ட்வேர்’ மற்றும் ‘டேட்டா’ தொழிலில் உலகத்தில் தலை சிறந்து விளங்குகிறது. இந்த நிறுவனம், தென்னிந்தியாவில் தனது முதல் வினியோக மையத்தைத் தொடங்குவதன் மூலம் இந்தியாவில் கால் பதிக்கிறது. இந்தியா சந்தைகளில் அது ஏற்படுத்தும் தாக்கங்களால், புதிதாக அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
‘எப்5’ என்ற செயலிகள் தொடர்புடைய நிறுவனம் தனது முதல் மையத்தை இந்தியாவில் திறக்கிறது. ஆஸ்திரேலியா, ஹாங்ஹாங் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கிய பிறகு அது இந்தியாவுக்கு வந்துள்ளது. ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சுசுகி, ஹரியானாவில் ‘ரிலையன்ஸ்’ மாதிரி பொருளாதார பகுதியில் புதிய நிலையத்தை தொடங்குகிறது.
தென்கொரியாவைச் சேர்ந்த ராட்சத வளர்ச்சியை பெற்றுள்ள ‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில் ‘ஸ்மார்ட் வாட்ச்’ உற்பத்தியை தொடங்கி இருக்கிறது. அதிக அளவு உற்பத்தி செய்யும் அதன் கம்பெனி நொய்டாவில் உள்ளது. 4ஜி தொழில்நுட்ப ‘ஸ்மார்ட் வாட்ச்’களை தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.